தமிழ் கட்சிகள் ஐக்கியம் கதைப்பது சுயலாப அரசியல் – டக்ளஸ்

20191219 121409
20191219 121409

தமிழ் மக்களுக்கிடையில் தமிழ்க்கட்சிகள் ஐக்கியம் எனக் கதைப்பது ஒரு சுயலாப அரசியல். வாக்குகளை அபகரிப்பது தான் அவர்களது நோக்கமே தவிர, மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அல்ல என கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பினுடைய கடந்த ஆட்சியில் தீர்க்கப்பட முடியாத பல நாளாந்த பிரச்சனைகள், அபிவிருத்திகள், வீட்டுத்திட்ட பிரச்சனைகள், வீதிகள், வேலைவாய்ப்புக்கள், காணிப் பிரச்சனை என பல வகையான பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மக்கள் அவற்றுக்கு தீர்வு கோரி வந்திருந்தார்கள்.

அவர்களது நியாயமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதாக சொல்லியிருக்கின்றேன். அதேநேரத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சரியான தெரிவை செய்யவில்லை என்ற ஆதங்கத்தையும் அவர்களிடத்தில் தெரிவித்திருக்கின்றேன். ஆனாபடியால் வரவிருக்கும் சந்தர்பத்தில் சரியான முடிவை எடுக்க வேண்டும் எனவும் மக்களிடம் தெரிவித்துள்ளேன் எனவும் கூறியுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் வடக்கு ஆளுனர் நியமனத்தில் ஏன் இந்த இழுபறி என கேள்வி எழுப்பிய போது, அதற்க்கு பதிலளித்த அமைச்சர், வடக்கு ஆளுனராக சரியான ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என அரச தலைமை ஆலோசனை செய்து கொண்டிருந்தது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபரை தெரிவு செய்து அமைச்சரவையின் அங்கீகாரத்தையும் ஆட்சியாளர்கள் பெற்றுள்ளார்கள். வெகு விரைவில் ஆளுனராக கடமைகளை பொறுப்பேற்று சேவைகளை செய்வார். அவருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மேலும் உடைவுகள் ஏற்பட்டுள்ளது. தமிழ் கட்சிகள் பலவாறாக உடைவதால் அடுத்த தேர்தலில் தமிழ் மக்களுக்கு எப்படியான பாதிப்புக்கள் ஏற்படும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினர் அதற்க்கு பதிலளித்த அமைச்சர்

தமிழ் மக்களுக்கிடையில் தமிழ் கட்சிகள் ஐக்கியம் எனக் கதைப்பது ஒரு சுயலாப அரசியல். வாக்குகளை அபகரிப்பது தான் அவர்களது நோக்கமே தவிர, மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது அல்ல. எந்த தேர்தலாக இருந்தாலும் தமிழ் மக்கள் தமிழ் அரசியல் வாதிகளை கூட்டாக தெரிவு செய்ய வேண்டும்.

அப்பொழுது தான் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என பொய் கூறி வாக்குகளை அபகரித்து வந்தார்கள். இன்று வரை தென்னிலங்கைக்கும், சர்வதேசத்திற்கும் ஐக்கியத்தை காட்ட வேண்டும் என்று சொன்னார்கள். இதற்கூடாகத்தான் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று சொன்னார்கள்.

ஆனால் மக்களது பிரச்சனைகள் தீராப் பிரச்சனையாக இழுபட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு தற்துணிவு இருக்குமாகவிருந்தால் அல்லது இவர்களுக்கு மக்கள் தொடர்பான உண்மையான அக்கறை இருக்குமாகவிருந்தால் இவர்கள் தனித்தனியே போட்டியிட்டு வென்று வந்து மக்களுடைய ஆணையைப் பெற்ற பின் ஐக்கியப்பட்டால் தான் மக்களுடைய பிரச்சனைகளை இலகுவாக தீர்க்கலாம் என்பது என்னுடைய அனுபவத்தின் மூலம் அறிந்தது எனத் தெரிவித்தார் .

தமிழ் மக்களுக்கு இந்தியா தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் என இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கிறார். தற்போதைய அரசியல் இந்தியா அழுத்தத்தைக் கொடுத்து தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியுமா எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்

தமிழ் அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் வாக்குகளை அபகரிப்பதற்காகவும், இழந்து போன செல்வாக்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்காகவும், கதைக்கப்படும் விடயங்கள் தான் இவை. எனக்கு சர்வதேசத்தின் மேல் நம்பிக்கையில்லை. ஆனால் இந்தியா மேல் நம்பிக்கையிருக்கின்றது. அதேபோல் இதை தீர்மானிக்க வேண்டியது எங்களது மக்கள். எங்களுடைய மக்கள் வருங் காலங்களில் சரியானவர்களை தெரிவு செய்வார்களாகவிருந்தால் தமிழ் மக்களது பிரச்சனைகளை விரைவாக தீர்க்கலாம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.