முல்லையில் பயணக்கட்டுப்பாடு மீறப்பட்டு தேவையற்ற விடயங்கள் இடம்பெறுகின்றன உரியதரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்கிறார் – ரவிகரன்!

IMG 20210602 WA0040
IMG 20210602 WA0040

முல்லைத்தீவு மாவட்டத்தில் பயணக்கட்டுப்பாடு அமுலில்உள்ள இந்தக்காலப்பகுதியில் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி வளச்சுறண்டல்கள், ஒன்றுகூடல்கள் மற்றும் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறிய வருகை என்பன இடம்பெறுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

IMG 20210602 WA0041 2

எனவே இவ்வாறு பயணக்காட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போதுள்ள கொரோனா அசாதாரண நிலைகாரணமாக நாட்டின் சகல பகுதிகளுக்கும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந் நிலையில் இந்த பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலங்களில் அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் வெளியே செல்லமுடியுமென நாட்டின் பாதுகாப்புத் தரப்புக்களும், சுகாதாரத் தரப்புக்களும் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றார்கள்.

இவ்வாறிருக்கும்போது இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் சில இடங்களில், வளச் சுரண்டல்கள் இடம்பெறுவதுடன், அதிகளவில் ஒன்றுகூடுவது மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருகைதருவதென பல சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.குறிப்பாக முல்லைத்தீவு தியோகுநகர் பகுதியில் இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களில் கடற்கரையோர மணல் திட்டுக்கள் மற்றும், காணிகளிலுள்ள மணல் தொடர்ச்சியாக அகழப்பட்டு வளச் சுரண்டல்கள் இடம்பெறுகின்றன. இது தொடர்பில் அப்பகுதிமக்கள் என்னிடம் தெரியப்படுத்தியுள்ளனர். இவ்வாறு கடற்கரையோர மணல் திட்டுக்கள் அகழப்படுவதால் தமது குடியிருப்புப் பகுதிக்குள் கடல்நீர் உட்புகுந்துவிடுமோ என்ற அச்சம் அந்தமக்களுக்கு இருக்கின்றது.

20210603 121629

இது தொடர்பிலே அந்த மக்கள், அப்பகுதிக்குரிய கிராம அலுவலரிடமும் தெரியப்படுத்தியுள்ளனர். அதற்கமைய அப்பகுதி கிராமஅலுவலர் இதுதொடர்பிலே ஆராய்ந்துள்ளார். இந் நிலையில் அங்கு மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் மணல் அகழ்விற்கென தம்மால் பெறப்பட்ட அனுமதிப்பத்திரத்தினை கிராம அலுவலரிடமும் அப்பகுதி மக்களிடமும் காண்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போதுள்ள அசாதாரண நிலையில் அத்திய அவசிய தேவைகளுக்கே வெளியே மக்கள் செல்லலாம் என பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்புக்கள் கூறுகின்றன. இந் நிலையில் இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்கள் அத்தியஅவசியமானதா?

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள இந்த காலத்தில் இவ்வாறான வளச்சுரண்டல்களுக்கான அனுமதிகளை வழங்கியது யார்? மேலும் காவற்துறையினர் அங்கு இருக்கும்போதே மணல் அகழ்வுச்செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.இதே போலதான் கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள சுருக்குவலை போன்ற சட்டவிரோத கடற்தொழில் செயற்பாடுகளில் ஈடுபடுகின்ற தென்னிலங்கையைச்சேர்ந்த மீனவர்கள் கடற்கரையிலே காலை மற்றும் மாலைவேளைகளில் அளவிற்கு அதிகமாக ஒன்று கூடுவதாக அங்குள்ள எமது மக்களால் தெரிவிக்கப்படுகின்றது.

20210603 121655 1

இதில் கவனஞ்செலுத்தவேண்டிய சுகாதாரத் தரப்பினரும், பாதுகாப்புத் தரப்பினரும் என்ன பார்த்துக்கொண்டிருக்கின்றனர்? இதனைவிட இந்த பயணக்கட்டுப்பாட்டுக் காலங்களிலும் தென்னிலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் பலரும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகைதருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான வெளிமாட்டத்தைச் சேர்ந்தவர்களின் வருகையினைக் கட்டுப்படுத்தவேண்டிய பாதுகாப்பத்தரப்பு தூங்கிக்கொண்டிருக்கின்றதா? எனவே இந்த பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலங்களில் இடம்பெறும் இந்த வளச்சுரண்டல்கள், அளவிற்கு அதிகமாக ஒன்றுகூடுவது மற்றும் வெளிமாவட்டத்தில் இருந்து வருகைதருவது போன்ற விடயங்களைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.