சட்ட விரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுதலை

vilakam
vilakam

வடமாராட்சி கிழக்கு கடல் பிரதேசத்தில் சட்ட விரோதமாக கடலட்டை பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக  கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்டத்தி்ற்கான உதவிப் பணிப்பாளர் ஜே. சுதாகரன் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாராட்சி கிழக்கு பிரதேசத்தில் நேற்று(04.06.2021) சட்ட விரோதமான முறையில் கடலட்டை தொழிலில் ஈடுபட்டிருந்த மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த, சுமார் 29 கடற்றொழிலாளர்களையும் 11 படகுகளையும் கைப்பற்றிய கடற்படையினர், அவற்றை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்திருந்தனர்.

தற்போதைய நாட்டின் நிலைவரங்களை கருத்திற் கொண்டு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் அனைவரும் இன்று கடற்றொழில் திணைக்களத்தினால் தலா 50,000 ரூபாய் சரீரப்  பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எனினும், கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும்.
அதேவேளை, சட்ட விரோத தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் கடற் படையினரின் ஒத்துழைப்புடன் தொடரும் என்று தெரிவித்துள்ளார்

தடை செய்யப்பட்ட தொழில் நடவடிக்கைககள் அனைத்தும் கட்டுப்படுத்த வேண்டும் என்று, நேற்று வடமாராட்சிக் கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், அறிவுறுத்தல்களை வழங்கியிருந்த நிலையில், குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது