த.ம.வி.பு கட்சி பொய் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது-கி.சேயோன்

viber image 2021 06 11 21 22 12
viber image 2021 06 11 21 22 12

கோரளைப்பற்றுப் பிரதேசசபையில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த பல செயற்திட்டங்களில் ஊழல்கள் நடைபெற்றது. தவிசாளர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரது கடந்த கால செயற்பாடுகளின் அனுபவமாக உலக வங்கியின் அபிவிருத்தித் திட்ட பிரேரணையைத் திருத்திக் கொண்டு வர வேண்டும் என்றே எதிர்த்தோமே தவிர முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக நாங்கள் செயற்படவில்லை. தங்கள் அரசியல் வங்குரோத்து நிலைமையை மறைப்பதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இவ்வாறு பொய்யான பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் தெரிவித்தார்.

கடந்த யூன் மாதம் 03ம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக இடம்பெற்ற கோரளைப்பற்றுப் பிரதேச சபையின் விசேட அமர்வில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த யூன் மாதம் 03ம் திகதி நடைபெற்ற மாதாந்த சபை அமர்வின் பிற்பாடு சில பொய்யான தகவல்களை மிகவும் நாகரிகமற்ற முறையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பியிருந்தார்கள். ஓட்டமாவடியில் இருந்த இறப்பு பிறப்பு பதிவாளர் விடயத்தை வாழைச்சேனைக்குக் கொண்டு வந்ததன் காரணமாக முஸ்லீம்களுக்குச் சார்பாக கடந்த அமர்வில் சபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை நாங்கள் எதிர்த்ததாகத் தங்களுக்குத் தேவையான வகையில் பரப்புரைகளை செய்திருந்தார்கள்.

இதிலிருந்து அவர்கள் எவ்வித அரசியற் சித்தாந்தமும் தெரியாதவர்கள் என்பது புரிகின்றது. அந்த இறப்பு பிறப்பு பதிவாளர் காரியாலய விடயத்திற்கும், கோரளைப்பற்றுப் பிரதேச சபையின் அன்றைய அமர்விற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அந்த நிகழ்வு தொடர்பாக அன்றை தினம் பிரதேச சபையில் முஸ்லீம் உறுப்பினர்களால் எந்த எதிர்ப்புப் பிரேரணையும் கொண்டு வரப்படவும் இல்லை அவ்வாறு அவர்களுக்குச் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்மைப்போ அல்லது எதிர்த்தரப்பில் இருக்கும் தமிழ் உறுப்பினர்கள் எவருமே ஆதரவு அளிக்கவில்லை. அவ்வாறிருக்கையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் இணைந்திருந்த முஸ்லீம் உறுப்பினர்கள் வாக்களிக்க வராமல் இருந்தது பிரதேச சபையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சியமைத்திருந்தாலும் அவர்களின் இயலாமையையே வெளிப்படுத்தியிருந்தது. அந்த அரசியல் வங்குரோத்து நிலைமையை மறைப்பதற்கு இவ்வாறு பொய்யான பிரச்சாரங்களைப் பரப்பியிருந்தனர். இதன் மூலம் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்றிருக்கும் எமது கட்சியின் மீதும், என்மீதும் சேறுபூசும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கோரளைப்பற்றுப் பிரதேச சபையில் உலக வங்கியின் நிதியின் மூலம் செயற்படுத்தப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தீர்மானத்தினை முஸ்லீம் உறுப்பினர்களுடன் சேர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எதிர்த்தது என்கின்ற பொய்யான விடயத்தை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள். தங்கள் கட்சியின் அரசியல் இலாபம் கருதி தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மீண்டுமொரு இனவாத கருத்தினை முன்வைத்து மக்களை ஏமாற்றத் தொடங்கியுள்ளது.

ஒன்றை இவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் முஸ்லீம் காங்கிரஸ் உட்பட முஸ்லீம் பிரதிநிதிகளின் ஆதரவுடனேயே கோரளைப்பற்றுப் பிரதேச சபையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆட்சியமைத்திருந்தது. எங்கள் மீது விரல் நீட்டும் முன்னர் தங்கள் செயற்பாடுகள் தொடர்பில் சிந்தித்துச் செயற்பட வேண்டும்.

நாங்கள் ஒருபோதும் அபிவிருத்திக்கு எதிரானவர்களோ, தடையானவர்களோ இல்லை. கடந்த காலங்களில் எமது சபையினால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு மக்கள் நல அபிவிருத்தித் திட்டங்களும் எமது உறுப்பினர்களோடு இணைந்த வகையில் நடைபெறவில்லை. அதுபோலவே கடந்த சபையில் கொண்டு வரப்பட்ட உலக வங்கியின் அபிவிருத்திச் செயற்திட்டப் பிரேரணையும் எமது உறுப்பினர்களுடன் எவ்வித கலந்துரையாடல்களும் விளக்கங்களும் இன்றி கொண்டு வரப்பட்டது. அது தொடர்பிலான தெளிவு வேண்டும் என்பதற்காகவே நாங்கள் அன்று அதனை எதிர்த்தோம். அன்று நாங்கள் எதிர்க்கும் போது எமது எதிர்ப்பின் நோக்கம் தெளிவாகச் சொல்லப்பட்டது. கடந்த காலங்களில் இது போன்று மேற்கொள்ளப்பட்டிருந்த பல செயற்திட்டங்களில் ஊழல்கள் நடைபெற்றது. தவிசாளர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரது கடந்த கால செயற்பாடுகளின் அனுபவமாக இதை திருத்திக் கொண்டு வர வேண்டும் என்று கூறியே நாங்கள் அதனை எதிர்த்தோம். அதன் காரணமாகத் தான் இன்று அது பேசுபொருளாக வந்திருக்கின்றது.

எவ்வித விளக்கங்களும் இன்றி இப்பிரேரணைக்கு நாங்களும் தலையாட்டியிருந்தால் எதிர்காலத்தில் இச்செயற்திட்டம் அமுல்ப்படுத்தப்படும் போது ஏதேனும் தவறுகள் இடம்பெற்றால் பிரதேச மக்கள் எங்களிடம் தான் கேள்வி கேட்பார்கள். பிரேரணை நிறைவேற்றும் போது நீங்கள் வாயைப் பொத்திக் கொண்டிருந்தீர்களா? என்று. அவ்வாறான விடயங்கள் இந்தப் பிரதேசசபை வேலைத்திட்டங்களில் நடந்தும் இருக்கின்றன. கடந்த காலச் செயற்திட்டங்கள் பல ஆக்கபூர்வமாக நடைபெறவும் இல்லை. பல பலவீனங்கள் காணப்படுகின்றன. இதன் நிமித்தம் எங்களிடம் தெளிவுபடுத்தப்படாத விடயத்திற்கு நாங்கள் எவ்வாறு ஆதரவனை வழங்குவது?

அதன் பிற்பாடு அன்றைய தினமே நாங்கள் செயலாளரிடம் சென்று இது தொடர்பான விளக்கங்களைக் கூறி அவருடைய கருத்தையும் எடுத்து ஒரு நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பிதோடு, அவ்வேளை இது எமது சமூகத்திற்கு உகந்த விடயம். இதனை ஏற்கனவே தவிசாளர் தெளிவுபடுத்தியிருந்தால் எங்கள் ஆதரவினையும் வழங்கியிருப்போம். செயலாளரே மீண்டும் ஒரு கூட்டத்தினைக் கூட்டுங்கள் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம் என்று தெரிவித்திருந்தோம்.

அந்த அடிப்படையில் இன்று இக் கூட்டம் நடைபெறுகின்றது. ஆனால் இன்றும் தவிசாளர் பெருந் தவறொன்றினைச் செய்துள்ளார். இத்தீர்மானம் தொடர்பில் இதுவரையில் எங்களுடன் கலந்துரையாடப்படவில்லை. எங்களின் ஆதரவு தேவை என்கின்றீர்கள் ஆனால் எங்களுடன் கலந்துரையாட வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றவில்லை.

எனவே தங்கள் கட்சியின் சரிவினை சீர்செய்ய வேண்டும், எங்கள் கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்கான இனவாதச் சூழலை உருவாக்காதீர்கள்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு வழங்கிய முஸ்லீம் உறுப்பினர்கள் தான் தங்கள் ஆதரவினை நீக்கிக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்கள். அது தொடர்பில் எங்களுக்குத் தெரியாது, அது உங்களுக்குள் உள்ள பிரச்சினை. இதுவரை காலமும் அவர்களைக் கொண்டு ஆதரவினை நீங்கள் எவ்வாறு பெற்றிருந்தீர்கள். இப்போது ஏன் அவர்கள் விலகிச் சென்றார்கள் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாத விடயங்கள்.

கடந்த காலங்களில் இதே முஸ்லீம் உறுப்பினர்களையும், அவர்களுடைய சட்டத்தரணியையும் வைத்துக் கொண்டுதான் எங்களை நீதிமன்றத்திற்கும், காவல் நிலையத்திற்கும் நாட்கணக்காகக் கொண்டு சென்றீர்கள். அதிலும் எங்கள் தரப்பில் இருந்த பெண் உறுப்பினர் என்றும் பாரமல் அவர்களையும் அலைக்களித்தீர்கள். அந்தவேளையும் நாங்கள் எங்கள் சமூகத்திற்காகவே உறுதியாக நின்றோம். இதனையும் கௌரவ தவிசாளர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒருபோதும் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல. கடந்த காலங்களில் நாங்கள் எமது சமூகம் சார்ந்த அனைத்து விடயங்களுக்கும் எமது ஆதரவினை வழங்கியிருக்கின்றோம். எங்களுடைய வட்டாரங்களுக்கு, எமது கட்சிக்கு ஒதுக்கீடுகள் வரவில்லை என்று நாங்கள் பார்க்கவில்லை. எமது பிரதேச சபையின் மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்ற ஒரே நோக்கத்திலேயே எங்கள் ஆதரவு வழங்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் மேலும் இதுபோன்று இனவாதத்தைத் தூண்டுவீர்களாக இருந்தால் அது நீங்கள் நிமிர்ந்து படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி எச்சில் உமிழ்வதற்குச் சமமான விடயம் என்பதையும் விளங்கிக் கொள்ளுங்கள்.

நாங்கள் அபிவிருத்திக்குத் தடையாக நிற்க மாட்டோம். ஆனால் அது ஊழல் இல்லாமல் நடைபெற வேண்டும். அவ்வாறு ஊழல் நடக்குமாக இருந்தால் நாங்கள் எதிர்த்துதான் நிற்போம். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எனவே மேற்குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமாக இருந்தால் அதில் பல மாற்றங்கள் உள்வாங்கப்பட வேண்டும். முதலில் அச் செயற்திட்த்திற்கான ஒப்பந்த விண்ணப்பங்கள் சரியான முறையில் கோரப்படவில்லை. அவை சாரியான முறையில் கோரப்பட வேண்டும். அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் எங்கள் உறுப்பினர்கள் இருவரின் பங்குபற்றுதலுடன் வெளிப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு செயற்படின் எங்கள் ஆதரவினையும் தருவோம்.

மக்களுக்கு நாங்களும் பதில் சொல்ல வேண்டும். எனவே விடயங்களில் கண்காணிப்பு என்பது மிக முக்கியமாக இருக்கின்றது. கடந்த காலங்களிலும் சரியான முறையில் ஒப்பந்த விண்ணப்பங்கள் கோரப்படடாமலும், விண்ணப்பங்களைக் கொண்டு வருகையில் தங்களைச் சார்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கோடு அதனைப் பெற்றுக் பெற்றுக் கொள்வதற்கு தவிசாளர் மற்றும் செயலாளர் இல்லாமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து தங்கள் சார்ந்தவர்களுக்கு மாத்திரம் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. அவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்துவிட்டு எவை எவை பரிமாறப்பட்டன என்பது தொடர்பான அனைத்து விடயங்களும் எங்களுக்கும் தெரியும், மக்களுக்கும் தெரியும்.

இவ்வாறு சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல் செயற்படாமல் மக்கள் நலனைக் கருத்திற் கொண்டு செயற்பட முன்வர வேண்டும். இந்த விடயம் இந்தத் தீர்மானங்கள் உங்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்தந் சபையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற முடியால் நீங்கள் பலவீனப்பட்டிருக்கின்றீர்கள் என்பதையும் நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.