பயணத் தடையை மேலும் இரு வாரங்களுக்கு நீடிக்குக! – இலங்கை வைத்தியர் சங்கம் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

isolation isolated curfew 1 scaled 1
isolation isolated curfew 1 scaled 1

இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட்டுப்பாட்டை நீடிக்குமாறு இலங்கை வைத்தியர் சங்கம் அரசை வலியுறுத்தியுள்ளது. நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனாத் தொற்றாளர்கள் பதிவாகி வருவதையும் இலங்கை மருத்துவ சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே வைத்தியர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பயணக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்பட்டால், கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கும் என்றும் இலங்கை வைத்தியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடையும் வரை 14 ஆம் திகதிக்குப் (நாளை) பின்னர் மேலும் இரண்டு வாரங்களுக்குப் பயணக்கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் எனவும் வைத்தியர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

“பயணக் கட்டுப்பாடுகளின்போது செயற்படும் தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் அதிகமான பி.சி.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்வதோடு, தனிமைப்படுத்தப்படுபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலம் சமூகத்தில் மறைந்துள்ள கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட வேண்டும்” எனவும் இலங்கை வைத்தியர் சங்கம் தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுக்கும், தொற்றிலிருந்து குணமடைந்து வருபவர்களுக்கும் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனைகள் மூலம் புதிய தொற்றாளர்களை இனங்காண்பதற்கான வாய்ப்பு குறைக்கப்படுகின்றது” எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.