கிளிநொச்சி ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட இணக்கம்!

dress
dress

கிளிநொச்சி மாவட்ட  ஆடைத்தொழிற்சாலையைத் தற்காலிகமாக மூடி சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க தொழிற்சாலை நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா காரணமாக கிளிநொச்சி மாவட்ட ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிடுமாறு கரைச்சிப் பிரதேச சபை தாக்கல் செய்த வழக்கு விசாரணை நாளைமறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்த வழக்குத் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாலிதன் ஆகியோருடன் ஆடைத்தொழிற்சாலை நிர்வாகத்தினர் இன்று பிரதேச சபை மண்டபத்தில் நடத்திய சந்திப்பிலேயே இந்த இணக்கம் ஏற்பட்டது.

இணக்கத்தின் அடிப்படையில் ஆடைத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது எனவும், மூடப்படும்  காலத்தில் சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலுக்கேற்ப சுகாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பது எனவும், அனைவருக்கும் பகுதி பகுதியாகப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு அதன் அடிப்படையில் பணியை ஆரம்பிப்பது எனவும் இணக்கம் ஏற்பட்டது.

இந்தக் கால இடைவெளியில் தொழிற்சாலை சார்பில் அரசிடம் கோரிக்கை விடுத்து ஊழியர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி ஏற்றுவதற்கான பணியை முன்னெடுப்பதாகவும் தொழிற்சாலை நிர்வாகம் தெரிவித்தது.