கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கைச்சாத்திடுமாறு சாகர காரியவசத்திற்கு அழைப்பு

D UPNztU0AELrPY
D UPNztU0AELrPY

வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு அழைப்பு விடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

அத்தோடு எரிபொருள் விலை குறைக்கப்படாவிட்டால் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் கறுப்பு கொடியேந்தி வீதிகளில் போராடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை கொழும்பு – பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில் ,

பேர்ள் கப்பல் தீ விபத்தின் காரணமாக பெருமளவான மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மீனவர்களால் கொண்டு வரப்படும் மீன்களை கொள்வனவு செய்வதற்கும் நுகர்வோர் அஞ்சுகின்றனர்.

கொவிட் பரவலும் அந்த மக்களின் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே நாம் பேராயரை சந்தித்தோம்.

கத்தோலிக்க மக்களுக்காகவும் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மக்களுக்காகவும் பேராயர் முன்னின்று செயற்பட்டுள்ளார். 2015 க்கு முன்னர் காணப்பட்ட அரசாங்கத்தில் எரிபொருள் சலுகையைப் பெற்றுக் கொடுப்பதற்கும் , எமது அரசாங்கத்தில் மண்ணெண்ணெய் விலை அதிகரித்த போது அதற்கும் எதிராகவும் பேராயர் மக்களுக்காக முன்னின்று செயற்பட்டார்.

எனவே மீனவர்களின் நலன் கருதி எரிபொருள் விலையைக் குறைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்குமாறு பேராயரிடம் கேட்டுக் கொண்டோம். மேலும் பேர்ள் கப்பல் நிறுவனத்திடமிருந்து பெற்றுக் கொள்ளப்படவுள்ள 40 மில்லியன் டொலர் நஷ்ட ஈட்டை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக பயன்படுத்த அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிக்குமாறும் பேராயரை கேட்டுக் கொண்டோம்.

மக்களுக்கான இந்த கோரிக்கைகளை முன்வைப்பதற்கு இன்று அரசாங்கத்தில் யாரும் இல்லை. ஆட்சியாளர்கள் சர்வாதிகார போக்கிலேயே செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சியாளர்களால் மேற்குலக நாடுகளிடம் மண்டியிட்டு கடன் பெற்றுக் கொள்ளும் நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. அரசாங்கத்ததிலுள்ளவர்கள் மக்களுக்காக முன்னின்று செயற்படுவதில்லை. எனவே தான் பேராயர் ஊடாக இந்த கோரிக்கைகளை முன்வைக்க எதிர்பார்த்துள்ளோம்.

அமைச்சர் உதய கம்மன்பிலவை பதவி விலகுமாறு வலியுறுத்திய பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எம்மால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் கையெழுத்திடுமாறு அழைப்பு விடுகின்றோம்.

எவ்வாறிருப்பினும் அவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும் மீனவர்களுக்கான நிவாரணங்களுக்காக குரல் கொடுப்தை நிறுத்தப் போவதில்லை.

எரிபொருள் விலை குறைக்கப்படாவிட்டால் நீர்கொழும்பில் கறுப்பு கொடியேந்தி பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் வீதிகளில் இறங்கி போராடுவோம். மீனவர்கள் வீதிக்கு இறங்குவதற்கு தயாராகுவார்கள். அவ்வாறில்லை என்றால் உடனடியாக எரிபொருள் விலையை குறைக்க நடவடிக்கை எடுங்கள் என்றார்.