தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவும் அதிகாரத்தை இராணுவத்தினரிடம் கையளிக்க முயற்சி

முன்னிலை சோசலிச கட்சி
முன்னிலை சோசலிச கட்சி

இரத்மலானை சேர்.ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகமானது அரசின் கீழிருக்கும் தனியார் உயர்கல்வி வழங்கல் கட்டமைப்பாகவே செயற்பட்டுவருகின்றது.

தற்போது அதே பெயரில் நாடு முழுவதும் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கும் அதுகுறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை இராணுவத்தினரிடம் கையளிப்பதற்கும் ஏற்றவாறான சட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவருவதாக முன்னிலை சோசலிசக்கட்சியின் பொதுச்செயலாளர் புபுது ஜயகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னிலை சோசலிசக்கட்சியினால் இன்று வியாழக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலம் என்ற பெயரில் கடந்த மார்ச்மாதம் 26 ஆம் திகதி சட்டமூலமொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி எதிர்வரும் 22 ஆம் திகதி இந்த சட்டமூலத்தைப் பாதுகாப்பு அமைச்சின் செயற்குழுவிடம் கையளித்து, பின்னர் வாக்கெடுப்பிற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறியமுடிகின்றது.

கடந்த மேமாதம் 21 ஆம் திகதியிலிருந்து நாடளாவிய ரீதியில் அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இவை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நடைமுறையிலிருக்கும் என்று தற்போது அறிவிக்கப்பட்டிருப்பினும், அதனைவிடவும் நீடிக்கப்படலாம் என்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

எனவே இவ்வாறானதொரு நெருக்கடிநிலையில் புதிதாகக்கொண்டுவரப்படக்கூடிய சட்டமூலங்கள், செயற்திட்டங்கள் தொடர்பில் முறையாக அறிந்துகொள்ள முடியாத அல்லது கருத்து வெளியிடமுடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஆகவே இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, அடுத்தடுத்து பல்வேறு சட்டமூலங்களை நிறைவேற்றும் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுத்திருக்கிறது.

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் என்று குறிப்பிடும்போது, இரத்மலானையில் அமைந்துள்ள சேர்.ஜோன் கொத்தலாவலவின் பெயரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கல்விநிறுவனமே நினைவிற்குவரும். இராணுவ மற்றும் பாதுகாப்புப்படையணிகளில் அங்கம்வகிப்போரின் உயர்கல்விக்காக இந்தப் பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அது மாற்றமடைந்தது.

அதாவது எந்தவொரு தரப்பினரும் இராணுவத்தின் அங்கம்வகித்து, பணம்செலுத்தி அங்கு கற்கக்கூடிய நிலை காணப்படுவதுடன், கற்றல் நடவடிக்கைகளைப் பூர்த்திசெய்ததன் பின்னர் குறித்த பணத்தைச்செலுத்தி இராணுவசேவையிலிருந்து வெளியேறமுடியும்.

எனவே இந்து பணத்திற்கு பட்டப்படிப்புச் சான்றிதழை வழங்கும் செயற்பாடே இங்கு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதாவது அரசின்வசமுள்ள தனியார் கல்விநிறுவனமாகவே இது தொழிற்படுகின்றது.

எனினும் இவ்வாறு மறைமுகமாக முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கையை நேரடியாக முன்னெடுக்கக்கூடிய வகையிலான சட்டமூலமே நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

இராணுவத்தில் சேவையாற்றுவோரும் எந்தவொரு தரப்பினரும் இந்தப் பல்கலைக்கழகத்தில் இணைந்துகொள்ளமுடியும் என்று புதிய சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி இராணுவத்தில் சேவையாற்றாத எவரொருவரும் பணத்தைச்செலுத்தி, பட்டப்படிப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையுருவாக்கப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் எந்தவொரு பாகத்திலும் இந்த ஜோன் கொத்தலாவல தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுதல், அதன்கீழ் சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் நிறுவுதல் மற்றும் அதுகுறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை இராணுவத்தின்வசம் ஒப்படைத்தல் ஆகியவற்றுக்கு ஏற்றவகையிலும் சட்டங்களைத் திருத்தியமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டபோது காணப்பட்ட சட்டம் இல்லாதுபோகும் அதேவேளை, இதுகுறித்த புதிய சட்டம் உருவாகும். இதனால் உயர்கல்வித்துறையில் பாரிய நெருக்கடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையில், உரிய தரப்புக்கள் இதுகுறித்து அவதானம் செலுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.