விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலின் கொள்கலன்களை விரைவாக அகற்றுதல் அவசியம்: அனில் ஜாசிங்க

1591721372WFWFWF
1591721372WFWFWF

கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி மூழ்கிக் கொண்டுள்ள கப்பலினால் கடல் வளத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது. இத்தீவிபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கடல்வளங்கள் மீள் புத்தாக்கமடைய அதிக காலம் செல்லும். விபத்துக்குள்ளாகியுள்ள கப்பலில் உள்ள கொள்கலன்களை விரைவாக அகற்றுதல் அவசியமாகும் என சுற்றாடல்த்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொழும்பு துறைமுகத்தின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகிய எம். வி. எக்பிரஷ் பேர்ல் கப்பலினால் கடல் வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை துரதிஷ்டவசமான ஒரு சம்பவமாக கருத வேண்டும். இப்விபத்திற்கு யார் பொறுப்பு கூற வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

தீ விபத்தினால் கப்பலில் இருந்த பொருட்கள் மற்றும் கப்பலின் கழிவு பொருட்கள் கடலில் கலக்கப்பட்டன. காற்றின் திசைக்கமைய அவை கடற்கரையோரங்களில் கரையொதுங்கியுள்ளன. இக்கழிவுகளை அகற்றும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடல்வளத்திற்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை மதிப்பீடு செய்ய துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் பாதிப்பு, கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, வளி மாசடைவு, நீர் மாசடைவு மற்றும் பொருளாதாரம் மற்றும் சமூக மட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்து ஆராயும் பணிகளை குழுவின் நிபுணர் குழுவினர் முன்னெடுத்துள்ளனர்.

இவ்விபத்தினால் கடல் வளத்திற்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பை குறுகிய காலத்திற்குள் மதிப்பிட முடியாது. பாதிக்கப்பட்டுள்ள கடல் வளம் மீள் புத்தாக்கம் அடைய அதிக காலம் தேவைப்படும். அதற்கான ஒத்துழைப்பை பௌதீக வளங்களை பயன்படுத்தி ஏற்படுத்திக் கொடுப்பது பிரதான செயற்பாடாக அமையும்.

ஆகவே பொது மக்கள் இயற்கை வளங்களை பாதுகாக்க பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.