சஜித் அணியுடன் சங்கமித்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 59 பேர் பதவி இழப்பு

சஜித் பிரேமதாஸ 1
சஜித் பிரேமதாஸ 1

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட 59 பேர் தமது உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவிகளை இழந்துள்ளனர்.

இவர்களின் பதவிகளை இரத்துச் செய்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி, கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நாடு முழுவதும் 2 ஆயிரத்து 433 ஆசனங்களைப் பெற்றது.

இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தலின்போது, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய சஜித் பிரேமதாஸ தரப்பினர் ஐக்கிய மக்கள் சக்தி என்ற பெயரில் புதிய கட்சியை உருவாக்கியதைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் பலர் புதிய கட்சியில் இணைந்துகொண்டனர்.

இவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கைகளை முன்னெடுத்த ஐக்கிய தேசியக் கட்சி, இவர்களை உள்ளூராட்சி பதவிகளில் இருந்து நீக்குவதற்கு முடிவெடுத்து அது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தது. இதன்படி 59 பேரின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரிவித்துள்ளது.

இவர்களில் வெலிகம, தங்காலை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களும் அடங்குகின்றனர் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த இடங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி, புதிய உறுப்பினர்களை நியமிக்கவுள்ளது.