கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் ஆளுந்தரப்பும் கையெழுத்திட வேண்டும்

Ug4se2FHlJPlRgISAXXntxwMHlePyTQG
Ug4se2FHlJPlRgISAXXntxwMHlePyTQG

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்தரப்பினர் மட்டுமன்றி ஆளுந்தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசிம் தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,

எரிபொருள் விலை அதிகரிப்பிற்கு முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் சாகர காரியவசம் உதய கம்மன்பிலவை மாத்திரம் பதவி விலகுமாறு அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் எரிபொருளின் விலை பாரியளவில் குறைவடைந்திருந்த போது , விலையை குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கவில்லை.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதால் எரிபொருட்களின் விலையை குறைக்கமுடியாது என்கின்றனர். ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு காரணம் அரசாங்கத்தின் முறையற்ற நிதிக் கொள்கை திட்டங்களாகும்.

ஆட்சி அதிகாரத்தை பொறுப்பேற்றதும் உடனே வற் வரியை குறைத்தனர். அதனால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருந்தது. கடந்த வருடம் மார்ச் மாதகாலப்பகுதியில் பணம் அச்சிட்டனர். இது போன்ற செயற்பாடுகளின் காரணமாகவே ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பிலவின் நாட்டு வளங்களை வெளிநாட்டவருக்கு கொடுக்க கூடாது என்று தெரிவித்து வந்திருந்தாலும் , தற்போது எரிபொருள் தொடர்பான ஏற்றுமதி இறக்குமதி நடவடிக்கைகள் , விநியோகம் மற்றும் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை , பொருத்தமான தனிநபர்களுக்கு பொறுப்பளிப்பதற்காக அமைச்சரவை அனுமதியைப் பெற்றுக் கொள்ள முயற்சித்து வருகின்றார்.

அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் ஆதரவளிக்க வேண்டும்.