பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கோரிக்கை

milk powder 1
milk powder 1

இறக்குமதி செய்யப்படும் பால் மாக்களின் விலைகளை அதிகரிக்குமாறு நுகர்வோர் நடவடிக்கை தொடர்பான அதிகாரசபையிடம் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றன.

அதன் பிரகாரம் ஒருகிலோ கிராம் பால்மாவின் விலையை 345 ரூபாவினாலும் 400கிராம் பால்மாவின் விலையை 140ரூபாவினாலும் அதிகரிக்குமாறே குறிப்பிட்டுள்ளன.

உலக சந்தையில் பால்மாக்களின் விலை அதிகரித்துள்ளமை, டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை மற்றும் கப்பல் கட்டணம் நூற்றுக்கு 40வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் அனைத்து பால்மாக்களிலும் ஒரு கிலோவுக்கு 350 ரூபாவரை நிறுவனங்களுக்கு நட்டம் ஏற்படுவதாக பால்மா இறக்குமதி நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

குறிப்பாக உலக சந்தையில் கடந்த ஜனவரி மாதத்தில் பால்மா மெட்ரிக்தொன் ஒரு அலகின் விலை 3200டொலருக்கு இருந்தபோதும் அது மே மாதத்தில் 4300டொலர்கள் வரை அதிகரித்திருக்கின்றது.

அதனால் தொடர்ந்தும் தற்போது இருக்கும் விலைக்கு பால்மா விநியோகிக்க முடியாது. அதனால் பால்மாவின் விலை அதிகரிக்கப்படவேண்டும் எனவும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை, உலக சந்தையில் பால்மா விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், சில நிறுவனங்கள் பால்மா இறக்கமதிக்கான புதிய முன்பதிவுகளை நிறுத்தியுள்ளதுடன், மேலும் சில நிறுவனங்கள் பால்மா இறக்குமதி தொகையை 30வீதம் வரை குறைத்திருப்பதாக தெரியவருகின்றது.

அத்துடன் பால்மா இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் கோரிக்கைக்கமைய விலை அதிகரிக்கப்படும் பட்சத்தில், தற்போது சந்தையில் விற்கப்படும் ஒருகிலாே கிராம் பால்மாவின் விலை 945 இல் இருந்து 1295வரை அதிகரிக்கப்படுவதுடன் 400கிராம் பால்மாவின் விலை 385ரூபாவில் இருந்து 525ரூவா வரை அதிகரிக்கப்டும் என்பது குறிப்பிடத்தக்கது.