அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு சுகாதார அமைச்சின் அறிவிப்பு!

m
m

மேல் மாகாணத்தில், அத்தியாவசிய சேவை மற்றும் அத்தியாவசியம் அல்லாத சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள் மற்றும் பகுதிநிலை அரச நிறுவனங்கள், பணியாளர்களை சேவைக்கு அழைப்பதற்கான நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சினால், இந்தப் புதிய நடைமுறை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, அத்தியாவசிய சேவைக்குள் அடங்கும் அமைச்சுக்கள், நிறுவனங்கள், பகுதிநிலை அரச நிறுவனங்கள், அவற்றின் பிரதானிகளுக்கு அவசியமான அளவில் அதிகாரிகளையும், உத்தியோகத்தர்களையும் சேவைக்கு அழைக்க வேண்டும்.

அத்தியாவசிய சேவைக்குள் அடங்காத, அமைச்சுக்கள், நிறுவனங்கள், பகுதிநிலை அரச நிறுவனங்கள், அதிகபட்சமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மாத்திரம் பணியாளர்களை சேவைக்கு அழைக்க முடியும்.

குறித்த பணியாளர்கள், வீட்டிலிருந்து பணியாற்ற முடியாவிட்டால் மாத்திரமே, அவ்வாறு சேவைக்கு அழைக்க முடியும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதேநேரம், பொதுப்போக்குவரத்து சேவையானது, அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளதால், சேவைக்கு அழைக்கப்படும் பணியாளர்களுக்கு, சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கான போக்குவரத்து வசதியை வழங்க வேண்டும்.

தனியார் நிறுவனங்கள், குறைந்தப்பட்ச பணியாளர்களுடன் அலுவலகப் பணிகளை முன்னெடுக்க வேண்டும். எவ்வாறிருப்பினும், இயலுமான அனைத்து சந்தர்ப்பங்களிலும், வீட்டிலிருந்து பணியாற்றுவதை ஊக்குவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.