அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு பதிலாக அவசர சிகிச்சை பிரிவு என்று தவறுதலாக வெளியிடப்பட்டுள்ளது

unnamed 15
unnamed 15


கடந்த 22 .6 .2021 அன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் சங்கக் கிளையினர் மேற்கொண்ட சந்திப்பின்போது கௌரவ ஆளுனரிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பளை கிளையினர் ஆதார வைத்தியசாலைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு தேவையான நிதியை இந்த வருடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கட்டுமான பணிகளை எந்தவித மாற்றங்களும் இன்றி தொடருமாறு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவால் தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைவாக நடப்பு ஆண்டிற்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து கௌரவ ஆளுநர் அனுமதி வழங்கினார். அத்துடன் இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்து கொண்டு இருந்தார். இக்கூட்டத்திற்கு வடமாகாண பிரதம செயலாளரோ அல்லது வடமாகாண சுகாதார திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவினரோ கலந்து கொண்டிருக்கவில்லை.

அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோயின் காரணமாக ஏற்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் தேவைப்பாடு காரணமாகவும் ,யாழ் போதனா வைத்தியசாலையின் அதிகரித்த நோயாளர்களுக்கு ஏற்ப அதி தீவிரசிகிச்சை பிரிவின் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உள்ள வளக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் யாழ் மாவட்டத்திலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொதுவாக கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களில் உள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளர்களை மாற்றவும் நேரிடுகின்றது. இதன்போது பலவிதமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியும் இருக்கின்றது.

எதிர்வரும் காலங்களிலும் இப்படியான நெருக்கடிகளிற்கு முகம் கொடுப்பதற்காகவே மருந்து களஞ்சியசாலைக்கு பதிலாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலை வைத்தியநிபுணர்களால் தீர்மானிக்கப்பட்டது. இவ் முடிவானது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் கௌரவ ஆளுநர் அவர்களை இவ் வருட ஆரம்ப பகுதியில் சந்திக்கும் பொழுது கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கான நிதி போதுமானதாக இல்லாமையினால் ஏற்கனவே மருந்து களஞ்சிய சாலை அமைப்பதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதி தீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கு மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தமைக்கான காரணம் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல்லது எதிர்வரும் காலங்களில் ஏற்படுகின்ற தீவிர நோய்களிற்கு சிகிச்சை அளிப்பதற்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவே மருந்து களஞ்சிய சாலையை விட அதிக தேவை என்பதால் ஆகும்.

மருந்து களஞ்சியசாலை முக்கியமானதாகினும் பெருந்தொற்று காரணமாக வருகின்ற நோயாளர்களை அவசர சிகிச்சை பிரிவில் அன்றி மருந்து களஞ்சியசாலையைக் கட்டியபின் அங்கு நோயாளர்களை பராமரிக்க முடியாது என்பதனை நன்கு கருத்தில் கொள்ள வேண்டும்

அத்துடன் நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் தொற்று காரணமாக பல்வேறு துறையினரும் வீட்டிலிருந்தே கடமை புரிந்து வரும் இந் நிலையில் சுகாதார துறையினர் ஆகிய நாங்கள் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து எங்களால் இயலுமானவரை மக்களிற்கான சேவைகளை குறைந்த பட்ச வளங்களுடன் வடமாகாணத்தில் வழங்கி வருகின்றோம் என்பதனை மனமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இவ்வாறு இருந்தபோதிலும் சில அரச அதிகாரிகள் காலத்திற்கு காலம் தேவையான விடயங்களை மக்களுக்கு வழங்குவதை விடுத்து மற்றவர்களை குறை கூறி தப்பித்துக் கொள்வது எங்களுக்கு மன வேதனை அளிக்கிறது. அத்துடன் இவ்வாறு பதில் அளிக்கும் பல அரசு அதிகாரிகள் வீட்டிலிருந்தே கடமை புரிந்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் வட மாகாண கெளரவ ஆளுநர் எமது பிரச்சினைகளை செவிமடுத்து யாழ்ப்பாணத்தில் உள்ள சகல தள வைத்தியசாலைகளின் அபிவிருத்திக்கு பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பிரிவால் முன்னளிக்கப்பட்ட அனனத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும் அனுமதி வழங்கியமைக்கு நாம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இச் செய்தியை சில ஊடகங்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு பதிலாக அவசர சிகிச்சை பிரிவு என்று தவறுதலாக செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.