ராஜபக்சகளால் பொருளாதாரத்தை ஒரு அங்குலமேனும் முன்னேற்ற முடியாது – சம்பிக்க

Minister Champika Ranawaka Statement Sri Lanka Tamil News1
Minister Champika Ranawaka Statement Sri Lanka Tamil News1

பஷில் ராஜபக்ஷவால் மாத்திரமல்ல. எந்தவொரு ராஜபக்ஷவாலும் தற்போது படு பாதாளத்தில் வீழ்ந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை ஒரு அங்குலமேனும் முன்னேற்ற முடியாது. பஷில் ராஜபக்ஷவினால் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என்று கூறுவதன் மறு அர்த்தம் நிதி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார் என்பதல்லவா என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொருளாதாரத்தை முற்றாக வீழ்த்தியுள்ளார் என்ற அர்த்தத்தில் அல்லவா பஷில் ராஜபக்ஷவைப் பற்றி கருத்து வெளியிடுகின்றனர். பஷில் ராஜபக்ஷ பொறுப்பேற்கின்றார் எனபதற்காக நாட்டின் பொருளாதாரம் மேம்படப் போவதில்லை.

அவருக்கு நிதி அமைச்சு வழங்கப்படுமா இல்லையா என்பது எமக்கு தேவையற்றது. எந்தவொரு ராஜபக்ஷவாலும் நாட்டின் பொருளாதாரத்தை ஒரு அங்குலமேனும் மேம்படுத்த முடியாது. அமைச்சு பதவி வகித்த ராஜபக்ஷாக்களில் எவரும் தமது அமைச்சுக்களில் அல்லது நிறுவனங்களில் நிதி ஒழுங்கினைப் பேணவில்லை.

அதே போன்று எந்தவொரு அரச நிறுவனத்தையும் இலாபமடைய செய்ததும் இல்லை. அவர்களால் பின்பற்றப்பட்ட பொருளாதார கொள்கையே இன்று நாட்டு மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. ராஜபக்ஷாக்கள் இலங்கையை இங்கிலாந்தின் அரசசபை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அவ்வாறானதொரு ஆட்சி முறை இலங்கையில் இல்லை.

இலங்கை ஒரு ஜனநாயக நாடாகும். இங்கு தகுதியுடைய பலர் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் மாத்திரம் நாட்டை ஆட்சி செய்யும் முறை தற்போது உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லை என்றார்.