அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

jvp5
jvp5

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு , எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கொழும்பு – கொம்பனி வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மனோ கணேஷன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு பட்டிகளை கழுத்தில் அணிந்து மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.

அத்தோடு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்த வீதியில் வெவ்வேறு வகை அரிசி மூட்டைகளை விலையுடனும் , தேங்காய் மற்றும் பாண் என்பவற்றை காட்சியப்படுத்தியவாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரைப் போன்ற உருவம் பதிக்கப்பட்ட முகமூடிகளை அணிந்தவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

‘பொருட்களின் விலை குறைக்கப்பட வேண்டும்’ , ‘ எரிபொருள் விலை ஆகாயமளவிற்கு உயர்ந்துள்ளது : முச்சக்கரவண்டிக்கான வாடகை அதிகரித்துள்ளது ‘ , ‘ இலங்கை ராஜபக்ஷ குடும்பத்தின் இடம் அல்ல , நாட்டை விற்பதை நிறுத்து ‘ , ‘ ஒரு டொலருக்கு ஒரு கிலோ அரிசி ‘ , ‘ விவசாயிகளுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடு’ என்ற வசனங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை ஏந்திய வாறு சுமார் இரு மணித்தியாலங்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்ந்தது.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில் ,

மக்களுக்கு எதிரான ஆட்சியையே தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இந்த ஆட்சியை கவிழ்க்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாட்டு மக்கள் கொரோனா வைரஸ் பரவலை கண்டு அச்சமடைந்திருப்பதோடு, அரசாங்கத்தினால் திட்டமிட்டே சுமத்தப்பட்டு வரும் சுமைகளை கண்டும் மக்கள் அஞ்சி வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொருட்களின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அதனை குறைக்குமாறு நாம் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்ற போதிலும் அரசாங்கம் அது தொடர்பில் கவனம் செலுத்தாது உள்ளது.மக்களுக்கு எதிரான ஆட்சியை முன்னெடுப்பதற்கே தற்போதைய ஆட்சியாளர்கள் முயற்சித்து வருகின்றார்கள். இவ்வாறான ஆட்சியாளர்களின் பதவி காலத்தை கவிழ்க்கும் காலம் வெகு விரைவில் வரும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவிக்கையில் ,

பொருட்களின் விலை அதிகரித்து செல்கின்றது. அவற்றை வாங்குவதற்கு மக்களிடம் பணம் இல்லை. பொருட்களின் விலையை குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தால் முடியாமல் போயுள்ளது. பணத்தை அச்சிடுவதிலேயே அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அளவுக்கு அதிகமான பணத்தை அச்சிடுவதால் எதிர்வரும் தினங்களில் பணவீக்கம் ஏற்படும் என்றார்.