அனைத்து சிறு கட்சிகளையும் இணைத்தே தேர்தல் சீர்த்திருத்தம் அணுகப்படும் என்கிறார் மனோ

mano 1
mano 1

“தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டுச் செயற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட உடன்படும் அனைத்து சிறு கட்சிகளும் இணைத்துக்கொள்ளப்படும். எவரையும் தவிர்த்து விட்டுப் பயணிக்கும் எந்தவித தேவையும் கிடையாது.” இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்தார்.

“ஜே.வி.பி. தலைமையகத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற சந்திப்பு அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்டமையால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உட்பட ஏனைய கட்சிகள் அழைக்கப்படவில்லை.மேலும், இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை, பொது நன்மை கருத்தை தாமும் ஆதரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ எம்.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பியும் உறுதியளித்துள்ளனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிறு கட்சிகளின் தேர்தல் சீர்திருத்த பேச்சில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏன் அழைக்கப்படவில்லை என்ற சர்ச்சை தொடர்பில் கருத்துக் கூறிய மனோ மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் இன ரீதியான சிறு கட்சிகளும், அரசியல் ரீதியான சிறு கட்சிகளும் தேர்தல் சீர்திருத்தம் என்ற பொதுப் பிரச்சினையைக் கூட்டாகவே எதிர்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் நண்பர் அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுகின்ற அதேவேளை, நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடனும் இது தொடர்பில் பேசியுள்ளோம்.

இன்றைய விகிதாசார முறைமையே எமது பொது நிலைப்பாடு என நாம் அவருக்குக் கூறியபோது, சஜித் பிரேமதாஸ , தான் இன்றைய விகிதாசார முறைமைக்கு முழு ஆதரவு தருவதாக எமக்கு உறுதியளித்துள்ளார். இது தொடர்பாக தமது கட்சி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்பியை அழைத்து அறிவுறுத்தல் வழங்கினார்.

அதேபோல், தேர்தல் சீர்திருத்த பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களுடனும் நான் நேரடியாகப் பல முறை பேசியுள்ளேன். வடக்கு மாகாணத்தில் புதிய கலப்பு முறைமை தமக்குச் சாதகமாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், நாடு முழுக்க சிதறி வாழும், தமிழ், முஸ்லிம் மக்களின் நன்மை கருதி தாமும் இன்றைய விகிதாசார முறைமை தொடர்ந்து பேணப்படுவதை ஆதரிக்கத் தயார் என கூட்டமைப்பு பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. என்னிடம் உறுதியளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களும் இத்தகைய நிலைப்பாட்டையே கொண்டுள்ளனர் என்று நான் அறிந்துள்ளேன்” – என்றார்.