க.பொ.த. சாதாரண தர, உயர்தர மாணவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் வேண்டும்! – கல்வி அமைச்சு தெரிவிப்பு

download 1 15
download 1 15

நாட்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் க.பொ.த. உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி செலுத்துவதற்கு கிட்டத்தட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம்  தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே பல நாடுகள் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கியுள்ளன. இருப்பினும், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு இலங்கை முன்னுரிமை அளிப்பதால், பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் தற்போதைக்கு முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.

இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஊடகங்களிடம் கூறுகையில்,

“பாடசாலை மாணவர்களுக்குக் கொரோனாத் தடுப்பூசி போடுவது தொடர்பாக சுகாதார அமைச்சகத்திடம் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இதுவரை எந்தவொரு உறுதியான முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆனால், இந்த விடயத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளுமாறு நாங்கள் அரசிடம் கேட்டுள்ளோம். இப்போதைக்கு, அரசின் திட்டத்தின்படி, 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்குத் தடுப்பூசி போடப்படுவதற்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 4 இலட்சம் தடுப்பூசிகள் தேவைப்படும் அதேவேளை, க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 3 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன. ஆகவே, மொத்தமாக சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் தேவைப்படுகின்றன.

ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான தடுப்பூசி திட்டம் திட்டமிட்டபடி ஆரம்பமாகும்”  –  என்றார்.