நாட்டின் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்

Rainning
Rainning

நாட்டின் தென்மேற்கு பகுதிகளான மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் எதிர்வரும் இரு தினங்களுக்கு அதிகளவு மழை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட மாகாணங்களில் இன்று(08) அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

மன்னாரிலிருந்து கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அதிகரித்த காற்று வீசக்கூடும்.

புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும்.

மன்னாரிலிருந்து புத்தளம் வரையானகடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னாரிலிருந்து புத்தளம் வரையான கடற்பரப்புகளும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலோடிகளும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.