தனியார் துறை பணியாளர்களின் ஆகக் குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம்

1625735078 nimal 2
1625735078 nimal 2

இந்நாட்டின் தனியார் துறை பணியாளர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்டமூலம் தொழில் அமைச்சர் நிமல் சிறிபால.டி.சில்வா தலைமையில் நேற்று (07) நடைபெற்ற தொழிலமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடலுக்கு உட்படுத்தப்பட்டது.

இலங்கை நாடாளுமன்ற பணிப்பாளரினால் (தொடர்பாடல்) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்பொழுது காணப்படும் ஆகக் குறைந்த சம்பளத் தொகையான 10,000 ரூபாவை 12,500 ரூபாவாகவும், ஆகக் குறைந்த நாள் சம்பளத் தொகையான 400 ரூபாவை 500 ரூபாவாக அதிகரிப்பதற்கும் 2016ஆம் ஆண்டு 03ஆம் இலக்க வேலையாளட்களின் குறைந்தபட்ச வேதனச்சட்டத்தின் 03வது சரத்தை திருத்துவதாக இது அமையும்.

இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக விதிக்கப்பட்ட எந்தவொரு தடைக்கோ அல்லது கட்டுப்பாடுகளுக்கோ உட்படாது என்றும், அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் சட்டமா அதிபர் சட்டரீதியான சான்றிதழ் வழங்கியிருப்பதாகவும், இதற்கமைய குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தின் அனுமதிக்காக சமர்ப்பிப்பது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் 2017ஆம் ஆண்டுக்கான ஊழியர் சேமலாப நிதியத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் 2018 ஆம் ஆண்டிற்கான தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை ஆகியவையும் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜகத் புஷ்பகுமார, ரஜிகா விக்ரமசிங்ஹ, கோகிலா ஹர்ஷினி குணவர்த்தன ஆகியோரும், தொழில் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.