ஆசிரியர்களை அவமதித்த கெஹலிய மன்னிப்புக் கோர வேண்டும்! – இராதாகிருஷ்ணன்

iratha kirishnen1000x600 scaled 1
iratha kirishnen1000x600 scaled 1

“ஆசிரியர்கள் தொடர்பில் அவதூறாகக் கருத்துரைத்த ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, ஆசிரியர்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும். இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியதாவது:-

“கொரோனா வைரஸ் தொற்றால் பாடசாலைகள் முடங்கியுள்ள சூழ்நிலையில், தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு மாணவர்களுக்கான கல்வியை ஆசிரியர்கள் மிகவும் அர்ப்பணிப்போடு முன்னெடுத்து வருகின்றார்கள்.

இந்த வகுப்புகளை முன்னெடுக்கின்றபோது அவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனினும், மாணவர்களின் நலனை கருதி பணியாற்றி வருகின்றனர். இவ்வாறு அர்ப்பணிப்புடன் தங்களுடைய கடமைகளை செய்து கொண்டிருக்கின்ற ஆசிரியர்களை அவமதிக்கும் வகையில், அவதூறாக அமைச்சர் கருத்து வெளியிடுவது வெறுக்கத்தக்க, கண்டிக்கத்தக்க விடயமாகும். எனவே, இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆசிரியர் சமூகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும்.

இன்று ஆசிரியர்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற நிலைமை நாளை ஏனைய அரச உத்தியோகத்தர்களுக்கு ஏற்படலாம். எனவே, இன்று ஆசிரியர்களுக்கு எதிராகக் கருத்து தெரிவித்திருக்கின்ற அமைச்சருக்கு எதிராக பெற்றோர்கள் தங்களுடைய எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்” – என்றார்.