பட்டதாரிகளின் நியமனமும் அரசாங்கத்தின் நிலைப்பாடும்

graduates
graduates

கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசாங்கம் 54000 வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் அவை இதுவரை செயற்பாட்டு ரீதியில் செயற்படுத்தப்படுவதாக தென்படவில்லை.

பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராய வேண்டியுள்ளது.

கடந்த அரசாங்கம் பட்டதாரிகளை உள்வாரி, வெளிவாரி என பிரித்து பட்டதாரிகள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி நியமனங்களை வழங்கி தமது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது.

ஆனால் தற்போதைய அரசு க.பொ.த சாதாரண தர மாணவர்களையும், உயர்தர மாணவர்களையும் ஒன்றிணைத்து 100000 அரச நியமனங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. இவை வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்கப்படாத வேளையில் தங்களின் பட்டதாரி எனும் அடையாயத்தினை தவிர்த்து க.பொ.த சாதாரண தர, உயர்தர தகுதிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு நியமனம் வழங்குமாறும் கேட்கின்றனர்.

இந்நிலையில் அரசாங்கங்கள், பட்டதாரிகளின் நியமனம் தொடர்பில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனரே தவிர அவற்றினை செயற்படுத்துவதாக தென்பவில்லை.

இவ்வாறு பேச்சுக்கள் நீடித்துக்கொண்டு செல்கின்ற வேளையில் பட்டதாரிகளின் வயது எல்லை 40ஐ தாண்டுகிறது. அதன் பின்னர் இவ்வாறானவர்களுக்கு எவ்வாறு வேலைவாய்ப்பினை வழங்க முடியும் அவர்களின் ஓய்வூதியம் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக தெரிவித்து கை விரிக்கின்றனர். அத்துடன் அவர்களின் நீண்ட கால படிப்பும், போராட்டமும் வீணாகின்றது.

இவை இவ்வாறு இருக்க பட்டதாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பல்கலைக்கழகங்களிற்கு உள்ளீர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கையை ஐம்பதாயிரத்தினால் அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தற்போதைய நிலைமையில் உள்வாரி, வெளிவாரி, எச்.என்.டி, பட்டதாரிகளுக்கான நியமனங்கள் இழுபறியாக காணப்படுகின்ற நிலையில் மேலும் பல பட்டதாரிகளை தோற்றுவிப்பதன் மூலம் அவர்களுக்கான வேலை வாய்ப்பினை எவ்வாறு உருவாக்குவது எதிர்கால சவால்களை எவ்வாறு சமாளிப்பது என பல சிக்கல்களை தோற்றுவிக்கின்றது.

படித்த மாணவர்கள் தொழில் கேட்டு போராடுவதனை எதிர்க்கின்ற அரச அதிகாரிகள் தமக்கான சம்பள அதிகரிப்பிற்காக போராடுவது எவ்வாறு நியாயமாக முடியும் எனவும் இவ்விடத்தில் நினைவுபடுத்த வேண்டியுள்ளது. ஆகையினால் வேலையற்ற பட்டதாரிகளுக்கான ஒரு படிநிலையை தோற்றுவித்து அவர்கள் தற்கூடாக தம்மை மெருகூட்டிச் செல்வதற்கான வாய்ப்பினையே கோரி அரசாங்கத்திடம் கோரி நிற்கின்றனர். அரசாங்கம் அதனை நிறைவேற்றிக் கொடுக்கும் பட்சத்தில் எதிர்கால சமுதாய வளர்ச்சிப் பாதைக்கு வழிகாட்டியாக அவை அமையும்.

போட்டிகள் நிறைந்த காலப்பகுதியில் உயர்கல்வியாக கருதப்படுகின்ற பல்கலைக்கழகங்களில் அரசாங்கங்கள் இவ்வாறான செயற்றிட்டங்களை கொண்டு வருவதன் மூலம் எதிர்கால படித்த சமூகம் விரக்தியான நிலையில் தமது படிப்பினால் எதுவத பயனுமில்லை என கருதி வாழ்க்கையை கொண்டு செல்ல முற்படுகின்றனர்.