மருதங்குளத்தில் சட்டவிரோத மணல் அகழ்வு!

received 2841284992849206
received 2841284992849206

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்கன்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு பாரியளவில் இடம்பெற்று வருவதாகவும் இது தொடர்பில் ஐயங்குளம் காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாது வேடிக்கை பார்ப்பதாகவும் மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்….

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புத்துவெட்டுவான் கிராம அலுவலர் பிரிவில் காணப்படுகின்ற விவசாய குளமாக மருதங்குளம் காணப்படுகிறது இந்த குளத்தினுடைய அலைகரை பகுதியிலே பாரியளவில் சட்டவிரோத மணல் அகழ்வு எந்தவிதமான அனுமதிகளும் இன்றி இடம் பெற்று வருகின்றது.

குளத்தினுடைய நீரேந்து பகுதிக்குள்ளும் அதனோடு அண்டிய ஆற்று படுக்கைகளில் காணப்படுகின்ற மணல்கள் எந்தவிதமான அனுமதிகளும் இன்றி சட்டவிரோதமாக குளத்தின் அலைகரை பகுதியிலேயே குவிக்கப்பட்டு டிப்பர் வாகனங்கள் அங்கு சென்று மணல் ஏற்றிச் செல்கின்ற போதும் காவல்துறையினர் இந்த விடயம் தொடர்பில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

குறிப்பாக இந்த குளத்திற்கு பொறுப்பான நீர்பாசன திணைக்களத்தினரோ அல்லது பிரதேச செயலக அதிகாரிகளோ கிராம அலுவலரோ தங்களுடைய முறைப்பாடுகளை கேட்டு அந்த விடயங்களை பார்வையிட்டு இவற்றை தடுத்து நிறுத்துவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் மக்கள் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டிய காவல்துறையினர் கூட குறித்த பகுதிகளை தாண்டி சென்று வனப்பகுதிகளில் மரக் கடத்தல் செயற்பாடுகளை தடுக்க சென்ற போதும் இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை நிறுத்துவதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காமை ஆனது காவல்துறையினரின் உதவியுடன் இந்த செயற்பாடு இடம் பெறுகின்றது என்பதை தமக்கு வெளிப்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இயற்கை வளங்கள் அழிக்கப்படுகின்ற செயற்பாடுகள் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்ற வகையிலே இந்த விதமான ஒரு திணைக்களத்தின் உடைய அனுமதிகளும் இன்றி இவ்வாறு சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற மணல் அகழ்வை தடுப்பதற்கு உரிய அதிகாரிகள் தொடர்பில் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தினரே பிரதேச செயலாளரோ கிராம அலுவலரோ அல்லது காவல்துறையினரோ மிக விரைவாக குறித்த பகுதியில் இடம்பெற்ற பாரிய அளவிலான சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்தி தங்களுடைய விவசாய குளத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோருகின்றனர்.

தங்களுடைய கிராமத்தில் மணல் தேவைக்கு மணல் அனுமதி பெற்று மணல் பெற்றுக்கொள்ள எந்த வழியும் இல்லாத போதும் இவ்வாறு சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எவ்வாறு அதிகாரிகள் துணை போகின்றார்கள் என்று கேள்வியெழுப்பும் மக்கள் மிக விரைவில் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோருகின்றனர்.