ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்றைய வாக்கெடுப்பு கூறுகின்றது – சுரேஸ்

Sequence 01.00 00 53 18.Still001
Sequence 01.00 00 53 18.Still001

ராஜபக்ச குடும்ப ஆட்சி இன்றும் பலமாக இருப்பதான செய்தியை நேற்றைய வாக்கெடுப்பு செய்தியொன்றை கூறுகின்றது. என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறித்த வாக்கெடுப்பு தொடர்பில் ஊடகவியலாளர் வினவியபோது பதிலளிக்கையிலேயே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது அமைச்சருக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்க வேண்டுமா? அல்லது அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டிருக்க வேண்டுமா ?என்ற வாத பிரதிவாதங்கள் எதிர் தரப்பிடமே இருக்கின்றது.

ஆகவே எல்லோரும் இணைந்து இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொடுத்ததாக தெரியவில்லை. சஜித் பிரேமதாச தலைமையிலான மக்கள் சக்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கான முன்னறிவித்தலை கொடுத்திருக்கின்றார்கள். 
ஆனாலும்கூட அவர்களுடன் இணைந்து இருக்கக்கூடிய எதிர்த்தரப்புக்கள் அனைத்தும் அவர்களுடன் பேசி இது தொடர்பான முடிவுகளிற்கு வந்திருக்க வேண்டும். அரசாங்கம் உண்மையில் 3ல் இரண்டு பெரும்பான்மையுடன் இருக்கின்றது.
ஆகவே அவர்கள் தமது அமைச்சரை தோற்கடிப்பதற்கு இடமளிப்பார்களே என்பதற்கில்லை. இருந்தாலும் கூட ஒரு கட்சி இவ்வாறான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றது எதிர்த்தரப்பில் இருக்க கூடிய கட்சிகளுடன் பேசியிருக்க வேண்டும்.

 பெற்றோல் விலை உயர்வுக்கு அமைச்சரே பொறுப்பு என்ற வகையில்தான இந்த நம்பிக்கையில்லா பிரேரணை வந்தது. அது வெறுமனே அவர்தான் பொறுப்பு கூற வேண்டும் என்றார் நிச்சயமாக இல்லை. அதற்கு அரசாங்கமும் பொறுப்பு கூற வேண்டும். 

ஆனாலும் எதிர்தரப்பிலே இருந்தவர்கள் முழுமையாக அதற்கு ஆதரவினை தெரிவித்திருந்தால் அரசாங்கம் அந்த எதிர்ப்பை பார்த்திருக்கும். ஆனால் இப்பொழுது அவர்களுக்கு இருந்த வாக்குகளைவிட அதாவது நான் அறிந்தவகையில் 149 வாக்குகள் ஆளும் கட்சி தரப்பில் இருக்கக்கூடியது. 

ஆனால் நான் அறிந்த வகையில் 152 வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள். அவ்வாறாக இருந்தால் எதிர்த்தரப்பில் இருந்த சிலரும் அவர்களிற்கு சார்பாக வாக்களித்திருக்கின்றார்கள் என்று கருத வேண்டும்.

 ஏற்கனவே 20ம் திருத்தத்திற்கும் அவ்வாறான வாக்களிப்பே இடம்பெற்றது. ஆகவே நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பில் முஸ்லிம் தரப்பினரா அல்லது ஏனைய தரப்பினரா ஆதரித்தனர் என்பது எனக்கு தெரியாது. அது தொடர்பாக எந்த விளக்கத்தையும் சொல்ல விரும்பவில்லை.

இருந்தாலும்கூட இவ்வாறான விடயங்கள் முழுமையான எதிர்த்தரப்பின் பங்களிப்புடன் அதற்கேற்ற வகையிலான நம்பிக்கையில்லா பிரேரணையாக செயற்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் அது ஆரோக்கியமாக இருந்திருக்கும்.

மாறாக இப்பொழுது ராஜபக்ச குடும்ப ஆட்சி தொடர்பில் இந்த வாக்கெடுப்பு ஒரு செய்தியை சொல்லியிருக்கின்றது. ராஜபக்ச குடும்ப ஆட்சி என்பது இன்னும் பலமாகவும், அசைக்க முடியாதவாறும் இருக்கின்றது என்ற ஒரு செய்தியை நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பு காட்டி நிற்கின்றது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.