கடல் தொழிலாளர்களுடைய வயிற்றில் அடிப்பதற்கு இடம் கொடுக்க மாட்டோம் – சுரேஸ்

IMG 20210721 113551 01 1
IMG 20210721 113551 01 1

எமது கடல் தொழிலாளர்களுடைய வயிற்றில் அடிப்பதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று(21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் . அவர் மேலும் தெரிவிக்கையில்,

டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக வருவதற்கு முன்னர் இந்த கடலட்டை பண்ணையினுடைய கடலட்டை குஞ்சுகளை வளர்ப்பதற்காக அரியாலையில் ஒரு பண்ணை போடப்பட்டது. ஆனால் அந்த பண்ணையை போடுவதற்கு எந்தவிதமான அனுமதி பெறப்படவில்லை.

இப்பொழுது ஒருபடி மேலே போய் பூநகரியில் இருக்கக்கூடிய கௌதாரி முனை எனப்படுகின்ற கடற்கரை கிராமத்தில் 2 ஏக்கர் கடற்பரப்பை எடுத்து அங்கு பண்ணை அமைக்கப்பட்டிருக்கின்றது. அந்த பண்ணை அமைப்பதற்கு பூநகரி பிரதேச செயலகத்திடமோ அல்லது பிரதேச சபையிடமோ அனுமதிகள் எதுவும் பெறப்படவில்லை என்பதுடன், கடல் தொழில் அமைச்சிடமும் எதுவும் பெறப்படவில்லை.

எங்களுடைய தொழிலாளர்களுக்கு பிராணவாயு கொள்கலன்கள், சுழியோடி போவதற்கான ஏனைய வசதிகள், அவர்கள் பல மணிநேரம் கடலுக்கடியில் நின்று அட்டைகளை பிடிப்பதற்கான ஏற்பாடுகள் போன்றவற்றை கடல் தொழில் அமைச்சர் செய்து கொடுப்பாராக இருந்தால் கடலட்டை பிடிப்பு என்ற விடயம் மேலும் நவீனப்படுத்தப்பட்டு மேலே கொண்டு போக முடியும்.

அவற்றை விடுத்து சீன நிறுவனத்துக்கு கொடுப்பதை யாரும் தடை செய்ய முடியாது என்ற தோரணையில் பேசுவதும், அவர்களின் இருப்பு தேவை என மார்தட்டிக் கூறுவதும் எந்த அடிப்படையில் என்ன தேவைக்காக என்பதை டக்ளஸ் தேவானந்தா மக்களுக்க விளங்கப்படுத்த வேண்டும்.

மேலும் எங்களிடம் தேவையான தொழிலாளர்கள் இருக்கின்றார்கள். புதிய ஆட்கள் எமக்கு வேறு எங்கிருந்தும் தேவையில்லை. நவீன முறையில் அட்டைபிடிப்பது எப்படி? சுழி ஓடுவது எப்படி என்று சொல்லிக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக பாதுகாப்பான ஏற்பாடுகளை செய்து கொடுப்பீர்களாக இருந்தால் அதுவே போதுமானதாக இருக்கும்.

இது ஒரு போட்டா போட்டி விடயம் அல்ல. இது தமிழ் கடல் தொழிலாளர்களுடைய தொழில் சார்ந்த விடயம் ஆகவே அதனை சரியான முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை.இவ்வாறான நடவடிக்கைகள் நிச்சயமாக ஏற்புடைய நடவடிக்கைகள் அல்ல. இவற்றை அவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். எமது கடல் தொழிலாளர்களுடைய வயிற்றில் அடிப்பதற்கு எந்தவிதத்திலும் இடம் கொடுக்காமல், எமது கடல் தொழில்களை எமது மக்களே செய்யக்கூடிய ஏற்பாடுகளை செய்து கொடுப்பதுதான் அமைச்சருடைய கடமையாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.