ஹிஷாலினி தொடர்பிலான சந்தேகங்களை துலங்கச் செய்ய வேண்டும் – அங்கஜன்

Remembrance
Remembrance

சிறுமி ஹிஷாலினி ஜுட்டின் மரணத்தில் மறைந்திருக்கும் சந்தேகங்களைக் களைந்து உண்மையை துலங்கச் செய்ய வேண்டும். நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா டயகம பகுதியைச் சேர்ந்த ஹிஷாலினி ஜுட்குமார் என்ற 16வயதுச் சிறுமி கடந்த மூன்றாம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள இல்லத்தில் தீக் காயங்களுக்கு இலக்காகி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி இருந்தமை உடற்கூறு பரிசோதனை வாயிலாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அச்சிறுமியின் மரணம் மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்பில் மறைந்துள்ள மர்மங்கள் வெளிக்கொணரப்பட வேண்டும்.

இதுதொடர்பான விசாரணைகளைத் துரிதப்படுத்தி உண்மையை வெளிக்கொணர்ந்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு பாதுகாப்பு தரப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொறுப்புக் கூற வேண்டிய மக்கள் பிரதிநிதி ஒருவரின் வீட்டில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது பணிப்பெண்களின் பாதுகாப்பை மேலும் கேள்விக்குட்படுத்துகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. மக்கள் இதற்காக நிச்சயம் ஒன்றுபட்டு குரல் கொடுக்கவேண்டிய அவசியம் உருவாகியுள்ளது.

தரகர்கள் மூலம் மலையகச் சிறார்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய கல்வி கிடைக்க வேண்டும். அந்தக் கல்வியினூடாக அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். மலையக மக்கள் தினம் தினம் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். வறுமையின் நிமித்தமே பணிப்பெண்களாக வெளிநாடுகள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்கின்றனர். அவர்களுக்குரிய பாதுகாப்பு மற்றும் உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.

ஹிஷாலினியின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை களைந்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பதன் ஊடாக ஏனைய பணிப்பெண்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும். அதுவே தனது மகளை இழந்துள்ள தாயின் கண்ணீருக்கு நாம் செய்யும் விலைமதிப்பற்ற கடமையாகும்.

சிறுமி ஹிஷாலினியின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கின்றேன்.

அத்துடன் ஹிஷாலினி மற்றும் இத்தகைய பாதிப்புகளால் உயிரிழந்த அனைத்து சிறுவர் சிறுமியர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் விதமாக நாளை 22.07.2021 மாலை 6.30 மணிக்கு, தத்தமது வீடுகள், அலுவலகங்களில் தீபம் அல்லது மெழுகுவர்த்தி சுடர்களை ஏற்றி அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் அழைத்து நிற்கின்றேன்.