காவல்துறையின் விசேட சுற்றிவளைப்பில் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

kaithu
kaithu

நாட்டில் நேற்றைய தினம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் சுமார் 3.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அத்தியடிய பகுதியில் கல்கிசை காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் 210 கிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

50, 41 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 21 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மொரட்டுவ பகுதியில் 25 வயது சந்தேகநபரும் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கிராண்ட்பாஸ் பகுதியில் 10 கிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோஹுவல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 15 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.