இளைஞரை தாக்கிய 5 காவற்துறையினருக்கு இடமாற்றம்

1604593252 Police 2
1604593252 Police 2

கோப்பாய் இளைஞர் ஒருவரை வானில் கடத்திச் சென்று தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள உப காவற்துறை பரிசோதகர் உள்ளிட்ட 5 காவற்துறை உத்தியோகத்தர்கள் கோப்பாய் காவல் நிலையத்திலிருந்து இடமாற்றப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுத் தொடர்பில் முன்னெடுக்கப்படும் உள்ளக விசாரணையில் தலையீடு செய்வதைத் தவிர்க்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் பிரியந்த லியனகேயின் உத்தரவில் ஐவரும் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.

கோப்பாய் காவற்துறை பிரிவில் கடந்த வியாழக்கிழமை வானில் வந்தகாவற்துறை சீருடை மற்றும் சிவில் உடையில் இருந்த கும்பல் ஒன்று இளைஞன் ஒருவரைக்  கடத்தி சென்று சித்திரவதை புரிந்து கைத்துப்பாக்கியால் தாக்கி வீதியில் வீசிவிட்டு சென்றது. 

அந்தச் சம்பவத்தில் கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளமை தொடர்பில் தாக்குதலுக்குள்ளான இளைஞனால் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கப்பட்டது.இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த காவற்துறை அத்தியட்சகரின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் உதவிப் காவற்துறை அத்தியட்சகர் தலைமையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.அந்த விசாரணைகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள உப காவற்துறை பரிசோதகர் மற்றும் 4 காவற்துறை உத்தியோகத்தர்கள் சாட்சிகளில் தலையீடு செய்வதைத் தடுக்கும் வகையில் அவர்கள் ஐவரும் இன்று உடன் நடைமுறைக்கு வரும் வகையில் வெவ்வேறு காவல் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதற்கான பணிப்பினை வழங்கியுள்ள யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிக்காவற்துறை மா அதிபர் பிரியந்த லியனகே, பாதிக்கப்பட்ட இளைஞனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.