வீட்டுத்திட்ட மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி யாழில் ஆர்ப்பாட்டம்!

IMG 20210802 WA0010 1
IMG 20210802 WA0010 1

வீட்டுத்திட்டத்தின் மிகுதி கொடுப்பனவை வழங்குமாறு கோரி இன்றையதினம் யாழ்ப்பாணம் – சங்கானை பிரதேச செயலகம் முன்பாக வீட்டுத்திட்ட பயனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுழிபுரம் மத்தி ஜே/173 கிராம சேவகர் பிரிவு மக்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவிக்கையில், கடந்த 2018 மற்றும் 2019 காலப்பகுதியில் ஜே/173 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட 45 குடும்பங்களுக்கு ரூபா ஐந்து இலட்சம் பெறுமதியான வீட்டுத்திட்டம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் குறித்த வீட்டுத்திட்டத்திற்கான நிதி எமக்கு முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை. ஒரு பகுதி அளவு நிதி மட்டுமே எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மிகுதி வேலைகளை நாங்கள் கடன்பட்டு தான் செய்துள்ளோம். இருந்தாலும் வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை.

எமது வீடும் முழுமை பெறாத நிலை ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கடன் கொடுத்தவர்களின் தொல்லை என நாங்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றோம். இந்த வீட்டுத் திட்டம் எங்களுக்கு வழங்குவதற்கு முதல் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருந்தோம். ஆனால் இந்த விட்டு திட்டமானது தற்போது எங்களை கடன் சுமையில் தள்ளியுள்ளது. எனவே உரிய தரப்பினர் எமது விடயத்தை கருத்தில்கொண்டு எமது வீட்டுத் திட்டத்தின் மிகுதி நிதியை சீக்கிரம் தந்துதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் – என்றனர்.  ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.