ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைகள் தொடர்பில் ஆலோசனை – டக்ளஸ்

download 5 2
download 5 2

இலங்கைக் கடற்றொழிலாளர்களினதும், நாட்டினதும் நலன்களை கருத்தில் கொண்டு ஒழுங்கு விதிகள் மற்றும் கடப்பாடுகள் என்பன வரையறுக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற இலங்கை மீனவர்கள் பின்பற்ற வேண்டிய சர்வதேச நியமங்களை மீள்திருத்தம் செய்வது தொடர்பில் மாளிகாவத்தையில் உள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில், பலநாள் ஆழ்கடல் மீன்பிடியில் ஈடுபடுகின்ற இலங்கை மீனவர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுங்கு விதிகளை மீள் திருத்துவது தொடர்பாகவும், அதனால் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.

இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்ற மீன்களில் சுமார் 60 வீதத்திற்கும் அதிகமான மீன்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் கொள்வனவு செய்யப்படுகின்றன.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளினால் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளதால், ஐரோப்பிய சந்தைகளில் இலங்கை மீன்களுக்கு சிறந்த வரவேற்பு காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பாக அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சர், துறைசார் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.