கொச்சிக்கடை தேவாலய தற்கொலை குண்டுதாரியின் தந்தை விடுதலை!

106901152 gettyimages 1138498129
106901152 gettyimages 1138498129

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில், 2019 ஏப்ரல் 21 ஆம்திகதி தற்கொலை குண்டுத்  தாக்குதலை நடத்திய அலாவுதீன் அஹமட் முவாத் என்ற தற்கொலை குண்டுதாரியின் தந்தை சகல குற்றச்சாட்டுக்களிலும் இருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு பிரதம நீதவான் புத்திக ஸ்ரீ ராகல இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சுமார் ஒன்றரை வருடங்களாக இந்த சம்பவம் தொடர்பில், அஹமட் லெப்பை அலாவுதீன் என்ற மேற்படி சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த சந்தேகநபர் தொடர்பிலான, எதிர்கால நடவடிக்கை குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களம், சட்டமா அதிபரின் ஆலோசனையை இதற்கு முன்னர் கோரியிருந்தது.

இதற்கமைய, சந்தேகநபர் தொடர்பில், எந்த சாட்சியமும் முன்வைக்கப்படவில்லை எனின், அவருக்கு எதிராக எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையும் முன்னெடுத்துச் செல்லப்படக்கூடாது என குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு, சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் குறித்த போதுமான புலனாய்வு தகவல்கள் கிடைக்கப்பெற்றும் அதனை தடுப்பதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ மற்றும் முன்னாள் காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதற்காக குறித்த வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு கொழும்பு மேல்நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூவரடங்கிய விசேட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

அவர்கள் இருவருக்கும் எதிராக சட்டமா அதிபரினால் தலா 864 குற்றச்சாட்டுக்கள் என்ற அடிப்படையில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.