5,372 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் தொகையுடன் 5 பேர் கைது

1628409052 termeric 02
1628409052 termeric 02

சிலாபம் முனை கடற்பிரதேசத்தில் நேற்று (07) ஒரு தொகை உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் இந்தியப் பிரஜைகள் ஐவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த சந்தேகத்திற்கிடமான குறித்த படகை இலங்கை கடலோர காவல்படையினர் சோதனை செய்த போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 143 உரப் பைகளில் பொதி செய்யப்பட்ட 5,372 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த உலர்ந்த மஞ்சள் மூடைகளை இந்திய படகிலிருந்து இலங்கை கடற்பரப்பில் வைத்து 10 படகுகளுக்கு மாற்றி நாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் குறிப்பிட்டனர்.

கொவிட் 19 வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றி இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், மீட்கப்பட்ட உலர்ந்த மஞ்சள் மூடைகள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்ட பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கொவிட் 19 வைரஸ் பரவும் அபாயத்தைக் கருத்தில் கொண்டு, கைது செய்யப்பட்ட இந்தியர்கள் ஐவரும், அவர்கள் பயணித்த படகும் இலங்கை கடற்பரப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.