சம்பள உயர்வுக்காக பருத்தித்துறையில் அதிபர், ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

p 1 1
p 1 1

சம்பள முரண்பாட்டைத் தீர்த்து வைக்கக் கோரியும், சேர் ஜோன் கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிராகவும் பருத்தித்துறையில் ஆசிரியர் சமூகத்தினர் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வடமராட்சி கல்வி வலய இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் மற்றும் அதிபர் சங்கம் ஆகியன இணைந்து அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்கமாகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“சம்பள உயர்வைக் கேட்கவில்லை; எமது சம்பளத்தையே கேட்கின்றோம்”, “பிள்ளைகளின் கல்வியைச் சிதைக்காதே; கல்வியை உறுதிப்படுத்து”, “அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டைத் தீர்த்துவை”, “இலவசக் கல்வியை இராணுவமயமாக்காதே”, “இருபத்து நான்கு வருட அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்குத் தீர்வை வழங்கு”, “கொரோனாப் போர்வையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடாதே” உட்படப் பல கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக பருத்தித்துறை நகரிலிருந்து பேரணியாக ஆரம்பமாகிய போராட்டம், பருத்தித்துறை நவீன சந்தை சுற்று வீதியால் பஸ் தரிப்பு நிலையத்தை வந்தடைந்து நிறைவுற்றது.

இந்தப் பேரணியில் வடமராட்சி கல்வி வலய அதிபர்கள், ஆசிரியர்களின் தொழிற்சங்கத்தைச் சேர்ந்த 14 சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.