நீதியின்றி 15 ஆண்டுகளை கடக்கும் செஞ்சோலை பாடசாலை மாணவிகள் படுகொலை!

th 1 1
th 1 1

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினைந்து வருடங்கள் கடக்கின்றன. தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயர்களின் வரிசையில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம்

உலகிலேயே  அதிகளவு பெண்கள் அதுவும் பாடசாலை மாணவிகள் ஒரே தடவையில் கொல்லப்பட்டது என்பது இதுவே வரலாறாக இருக்கின்றது. உலகின் எந்த மூலையிலும் இப்படி ஒரு செயல் நடக்கவில்லை அந்த சாதனையை இலங்கை அரசாங்கம் 2006  ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அதிகாலை வேலை நடத்தி முடித்திருந்தது .

வன்னிப் பெருநிலப்பரப்பில்  கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய் ஆகிய கல்வி வலய பாடசாலைகளில் இருந்து தலைமைத்துவ பயிற்ச்சிக்காக அழைத்து செல்லப்பட்ட 400 மாணவிகளில் 54 பாடசாலை மாணவிகள் உட்பட செஞ்சோலை சிறுவர் இல்ல  பணியாளர்கள் உள்ளடங்கலாக 61 பேர் சில மணித்துளிகளில் படுகொலை  செய்யப்பட்டு இலங்கை அரசு மக்களை பாரிய   சோகத்தில் மூழ்கடித்தது.

இந்த பயிற்சி நெறி ஆகஸ்ட் 11, 2006 இல் இருந்து 20 ஆகஸ்ட், 2006 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பயிற்சிநெறி தொடங்கிய மூன்றாவது நாளே மாணவிகள் இலக்கு வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். பேனா ஏந்திய கரங்கள் துண்டாடிப்போய் கிடந்தன, துள்ளிக்குதித்து ஓடிய கால்கள் தசை குவியலாக கிடந்தன, கனவுகளை சுமந்த நெஞ்சு குண்டு சிதறலால் கிழிக்கப்பட்டு குருதி கொட்டிக்கொண்டு கிடந்தது. அதிகாலை வேளை கிணற்றடியிலும், மலசல கூடத்திலும், சமையலறையிலும், தம்தம் கடமைகளில் இருந்த மாணவிகள் திட்டமிட்டு இலக்கு வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்  

காலை வேளையில் வன்னி வான்பரப்பில் நுழைந்த கிபிர் விமானங்கள் பாடசாலை மாணவிகள் தலைமைத்துவ பயிற்சிக்காக வருகைதந்திருந்த வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது  ஆறு முறை குண்டுகளை கொட்டியது. கொட்டப்பட்ட குண்டுகள் திட்டமிட்டபடி முதல் குண்டு பிரதான வாயிலில் போடப்பட்டது மாணவிகள் வாயிலின் ஊடாக ஓடமுடியாத படி வகுக்கப்பட்ட திட்டத்தின் முதற்படி இது அடுத்த ஐந்து குண்டுகளும் கண் இமைக்கும் நேரத்துள் நான்கு திசைகளுக்கும் போடப்பட்டு ஆறாவது குண்டு மீண்டும் வாயிலில் போடப்பட்டது.

மாணவிகள் எந்த திசை ஊடாகவும் வெளியே ஓடமுடியாதபடி திட்டமிட்டு குண்டுமழை பொழியப்பட்டது. அங்கிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் ஓலம் இப்போதும் காதில் ஒலிக்கிறது ஒவ்வொரு உடலாக அள்ளி எடுத்த கரங்கள் இப்போதும் இரத்தக்கறை மாறாது இருக்கிறது. உலக வரலாற்றில் நடந்த மறக்கமுடியாத பேரவலமாக தமிழர் வரலாற்றில் பதியப்பட்டுவிட்டது எம் இனிய பள்ளி குழந்தைகளின் பேரிழப்பாகும்.

இந்த சம்பவம் இடம்பெற்ற அன்று ஆட்சியில் இருந்தவர்கள் இந்த கொலை பற்றி வாய் மூடி மெளனிகளாகவே இருந்தனர். இன்றுவரை அந்த பாரிய படுகொலை பற்றி எந்தவித விசாரணைகளோ அல்லது பொப்புக்கூறல்களோ இடம்பெறவில்லை.இந்த கொடும் கொலைத்தாக்குதலில் கொல்லப்பட்ட மாணவிகளாக மு/வித்தியானந்தா கல்லூரி மாணவிகள் நிவேதனா தமிழ்வாசன், அனோயா சுந்தரம், தயானி கிரிதரன், புவனேஸ்வரி புவனசேகரம் மு/குமுளமுனை மகாவித்தியாலய மாணவிகள் நிந்துயா நல்லபிள்ளை, ராஜிதா வீரசிங்கம், கெளசிகா உதயகுமார், சுகிர்தா சாந்தகுமார், தாட்சாயணி விவேகானந்தம் மு /புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி மாணவிகள் பென்சிடியூலா மகாலிங்கம், தர்சிகா தம்பிராசா சுதர்சினி துரைலிங்கம் மு/உடையார்கட்டு மகாவித்தியாலய மாணவிகள் கோகிலா நாகலிங்கம்
,மதனி பாலகிருஸ்ணன், விதுசா கனகலிங்கம், நிருபா கனகலிங்கம், அருட்செல்வி முருகையா, இந்திரா முத்தையா, கோகிலா சிவமாயஜெயம், சாந்தகுமாரி நவரட்ணம், கார்த்திகாயினி சிவமூர்த்தி, சத்தியகலா சந்தானம், தபேந்தினி சண்முகராஜா மு/விசுவமடு மகாவித்தியாலய மாணவிகள் நந்தினி கணபதிப்பிள்ளை, யசோதினி அருளம்பலம், ரம்ஜா ரவீந்திரராசா, தீபா நாகலிங்கம், தீபா தம்பிராசா, நிரஞ்சலா திருநாவுக்கரசு, நிசாந்தினி நகுலேஸ்வரன், தயாளினி தம்பிமுத்து, கேமாலா தர்மகுலசிங்கம், சிந்துஜா விஜயகுமார், ஜெசீனா சந்திரன் மு /முல்லைத்தீவு மகாவித்தியாலய மாணவிகள் கம்சனா ராஜ்மோகன், கலைப்பிரியா பத்மநாதன், தனுஷா தணிகாசலம், சுகந்தினி தம்பிராசா, வத்சலாமேரி சிவசுப்பிரமணியம், திவ்யா சிவானந்தம், பகீரஜி தனபாலசிங்கம், கெலன்சுதாஜினி மார்க்குப்பிள்ளை கிளி/தர்மபுரம் மகாவித்தியாலய மாணவிகள் நிவாகினி நீலையனார்,மங்களேஸ்வரி வரதராஜா மகிழ்வதனி இராசேந்திரம் மு /செம்மலை மகாவித்தியாலைய மாணவிகள் கிருத்திகா வைரவமூர்த்தி, திசானி துரைசிங்கம், வசந்தராணி மகாலிங்கம், நிவேதிகா சந்திரமோகன் மு /ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவி நிலோஜினி செல்வம் கிளி /முருகானந்தா மகாவித்தியாலய மாணவிகள் பிருந்தா தர்மராஜா, சர்மினி தேவராசா கிளி /பிரமந்தனாறு மகாவித்தியாலய மாணவி லிகிதா குபேந்திரசிங்கம் ஆகிய 54 மாணவர்களும் 7பணியாளர்களுமாக 61 பேர் கொல்லப்பட்டனர்.

அப்போது பதவியில் இருந்த இராணுவப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல கொல்லப்பட்டவர்கள் மாணவிகள் இல்லை என்ற கருத்தை முன்வைத்திருந்தார். சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்ட நடுநிலை அமைப்புக்களான ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமும் இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் கொல்லப்பட்ட அனைவரும் அப்பாவி மாணவிகளே என்பதை உறுதிசெய்தனர். இருப்பினும் இந்த தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், மற்றும் சர்வதேச சிறுவர் அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் என எவையும் நடவடிக்கை எடுக்க தவறி இருந்தமை  இன்றைய நாளில் சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.