சிங்கள தலைவர்கள் இயற்கைப் பேரழிவிலும் வஞ்சகம் காட்டுவதாக குற்றச்சாட்டு

sivaji 1
sivaji 1

ஐனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் செயற்பாடுகள், தமிழ் மக்களை இனவாதமாகப் பார்க்கின்றாரா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், வடகிழக்கு தொடர்பில் சிங்கள ஆட்சித் தலைவர்கள் கொண்டுள்ள இனவாதப் போக்கு காரணமாக ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலைமைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது..

நாட்டில் புதிதாகப் பதவியேற்றுள்ள ஐனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச தன்னை ஒரு சாதாரணமான நபர் போன்று சில செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். ஆனால் அவருடைய செயற்பாடுகள் இனவாத ரீதியாகவே முன்னெடுக்கப்படுவதாகக் தெரிகின்றது.

குறிப்பாக தமிழ் மக்களின் இனப்பிரச்சனை பற்றிய எந்தவித நிலைப்பாட்டையும் அவர் கொண்டிருக்கவில்லை. அதே போன்று தமிழ், முஸ்லீம் மக்கள் என தமிழ் பேசும் மக்களை இனவாதமாகப் பார்க்கின்றாரா என்ற கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.

குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கினால் வடக்கு கிழக்கு உட்பட பல மாகாணங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதிலும் வடகிழக்கைப் பொறுத்தவரை மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்தப் பிரதேசங்கள் தொடர்பில் ஜனாதிபதி தனது கவனத்தை எடுக்காத நிலையே இருக்கின்றது.

இந்த வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டதாக கூறி அனுராதபுரம் மற்றும் பொலநறுவை மாவட்டங்களுக்கு ஜனாதிபதி நேரடி விஐயம் செய்து அந்தப் பாதிப்புக்களைப் பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உடனடி உதவிகளை வழங்கியிருக்கின்றார். இவ்வாறு தெற்கிலுள்ள இந்த இடங்களுக்குச் சென்ற ஜனாதிபதியால் வடகிழக்கிற்கு செல்ல முடியவில்லை.

இங்கும் எமது மக்கள் வெள்ள அனர்த்தத்தால் பல்வேறு கஸ்ர துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தெற்கில் நேரடியாக சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு வருகின்ற ஜனாதிபதியால் வடகிழக்கில் ஏன் அப்படிச் செயற்பட முடியவில்லை.

கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமி பேரவலத்தின் போதும் இதே போன்று தான் செயற்பட்டனர். பெரும் பாதிப்பு எமது பகுதிகளில் ஏற்பட்ட போது அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையிலும் நாங்கள் அந்த நிலைமையை எதிர்கொண்டோம். குறிப்பாக புலிகள் அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தனர்.

இதைப் போல 1978 ஆம் ஆண்டும் சூறாவளிக் காற்றில் மட்டக்களப்பு முற்றாக பாதிக்கப்பட்டது. ஆனால் அன்றைய பிரதமராக இருந்த பிரேமதாச கூட வேறு இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களைச் சென்று பார்வையிட்டிருந்தாலும் மட்டக்களப்பிற்கும் வருவதாகச் சொல்லிவிட்டும் வரவில்லை. இதனால் அங்கு நின்றிருந்த தமிழ் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்திரந்தனர். இவ்வாறு சிங்கள ஆட்சித் தலைவர்கள் இயற்கைப் பேரழிவிலும் வஞ்சகம் காட்டுகின்றனர்.

இதே வேளை இந்தியாவிற்கு சென்ற ஐனாதிபதியிடம் 13 ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்த வேண்டுமென இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருந்தார். ஆனால் அங்கேயே வைத்து 13 அமுல்படுத்த மாட்டோம் என்று ஜனாதிபதி கூறியிருக்கின்றார். அது மாத்திரமல்லாமல் அதிகாரப் பகிர்வையும் தர மாட்டோம் என்கின்றார்.

ஜனாதிபதியின் இத்தகைய செயற்பாடுகளைப் பார்க்கின்ற போது நாடு எங்கே போகின்றது என்ற கேள்வி எழுகிறது. ஆகவே இதற்குரிய பதிலை அரசாங்கம் தர வேண்டும். ஆயினும் இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தால் நாங்கள் ஒரு மடிவை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமென்பதை அரசாங்கத்திற்கு எச்சரிக்கையோடு சொல்லிக் கொள்கிறோம் என்றார்.