கிறிஸ்மஸ் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்டம்

20191225 125223
20191225 125223

கிறிஸ்மஸ் தினத்தில் பாலன் பிறப்பை கொண்டாடும் நிலையில் தமது பாலகர்களை தாம் தேடி வருவதாக தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

வவுனியா, ஏ9 வீதியில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் 1040 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களின் படத்தை நத்தார் தாத்தா வேடமணிந்து, நாத்தார் வாழ்த்துக்கள் அடுத்த நத்தாருக்குள் தீர்வு என வாசகத்தையும் பொறித்து ஏந்தியிருந்தனர்.

மேலும், துப்பாக்கிகளை காட்டி கைகளை உயர்த்திப் பிடிக்கச் சொல்லி கூட்டிச் சென்ற அண்ணா எங்கே, பச்சை உடையில் இரும்பு கம்பியால் தாக்கி வீதியில் இழுத்துச் செல்லப்பட்ட அப்பா எங்கே, கோத்தா மாமா எங்க ஆசை மாமா, மைத்திரி மாமா வந்தீங்க பொறுப்பு கூறாமல் சென்றீங்க’ என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியவாறும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளுடனும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, எல்லோரும் பாலன் பிறப்பு நாளை கொண்டாடும் இந்த வேளையில் தாம் பிறந்து தொலைத்த தமது பிள்ளைகளுக்காக 10 வருடங்களாக போராடி வருகின்றோம். எங்களுக்கு எப்போது விடிவு கிடைக்கும் என கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் கருத்து தெரிவித்தனர்.