வவுனியா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களுக்கான 03வது விடுதியும் திறப்பு!

IMG 2690 1
IMG 2690 1

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதால் மூன்றாவது விடுதியும் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வவுனியா பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன்,தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் (Quarantine Curfew) அமுலில் உள்ளபோதும், மக்கள் தமது நடமாட்டங்களை குறைத்துக்கொள்வதுடன், சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றாவிடின் நிலைமை கைமீறிப்போகும் நிலை ஏற்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

வவுனியா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வவுனியா வைத்தியசாலையில் அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளர்களை பராமரிப்பதற்காக 100 படுக்கைகளை கொண்ட 3 விடுதிகளும், 15 படுக்கைகளை கொண்ட கர்ப்பிணி தாய்மாருக்கான விசேட விடுதியும், 6 படுக்கைகளை கொண்ட அதி தீவிர சிகிச்சை பிரிவும், 2 படுக்கைகளை கொண்ட சிறுநீரக நோயாளர்களுக்கான இரத்த சுத்திகரிப்பு பிரிவுமாக 120 இற்கும் அதிகமான படுக்கைகளை கொண்ட நோயாளர் பராமரிப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் இது எமது வைத்தியசாலையின் ஆளணி மற்றும் ஏனைய காரணிகள், வளங்களை பொறுத்தவரையில் மிக அதிகளவாகும் என தெரிவித்தார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் 50 வரையான கொரோனா மரணங்கள் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலை கட்டில்களை அதிகரிப்பதோ, உயிர்சுவாச கருவிகளை தருவிப்பதோ மாத்திரம் மாவட்டத்தின் தொற்றுநிலையை கட்டுப்படுத்திவிடாது. மாறாக, மக்களின் அதியுச்ச பங்களிப்பே பிராந்தியத்தின் தொற்றுநிலையை கட்டுக்குள் கொண்டுவர அத்தியாவசியமானதென குறிப்பிட்டார்.

வவுனியா வைத்தியசாலையில் மூன்றாவது விடுதியும் தற்போது செயற்படத்தொடங்கியுள்ளமை, தினமும் அதிகரித்து வரும் தொற்றாளர்களினால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதையே உணர்த்தி நிற்கின்றது.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை, பிராந்தியத்தின் ஒரேயொரு அறிகுறிகளுடன் கூடிய கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சை நிலையமாக உள்ளதுடன், வைத்தியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களும் தற்போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருவதனால், கொரோனா நோயாளர் பராமரிப்புடன், சுகாதார தரப்பினரின் பாதுகாப்பு, கொரோனா அல்லாத பிற நோயாளர்களுக்கான முறையான சிகிச்சை வழங்கல் என்பன வவுனியா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது- என்றார்