இளம் வயதினருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்துவது பொருத்தமற்ற செயலாகும் – விசேட வைத்தியர்கள் சங்கம்

பைசர்
பைசர்

சைனோபாம் தடுப்பூசி மூலம் மிகவும் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி உண்டாகும் 20 -30 வயதுக்கு இடைப்பட்ட  வயது பிரிவினருக்கு, பைஸர் தடுப்பூசியை செலுத்துவதானது முறையற்றது என்றும், விஞ்ஞானபூர்வமான தரவுகளை மீறும் செயல் எனவும் விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் 20 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பைஸர் தடுப்பூசி வழங்குவதற்கு யோசனை அடங்கிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் கடிதத்துக்கு பதிலளிக்கும் வகையில் அச்சங்கத்தினால் விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிவித்தலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் தீர்மானம் எடுப்பவர்கள், அதற்காக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர்கள் குழாம், உலக சுகாதார ஸ்தாபனம் ஆகியவற்றின் அனுமதியுடன் முன்வைக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றுவது அவசியமாகும்  என விசேட வைத்தியர்கள் சங்கம் குறித்த அறிவித்தல் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளது.

விடயம் தொடர்பான அறிவைக்கொண்டுள்ள அக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை உரிய வகையில் செயற்படுத்தாதன் காரணமாகவே 60 வயதுக்கு மேற்பட்ட வயது வகுப்பினரிடையே அதிகளவில் மரணம் நிகழ்வதாக அச்சங்கம் தெரிவிக்கிறது.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமையளிக்காது, 30 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட வயது வகுப்பினருக்கு தடுப்பூசி வழங்குவதில் கவனம் செலுத்தியதன் விளைவாகவே இந்த மரணங்கள் நிகழ்கின்றன.

எனவே, இந்த சந்தர்ப்பத்தில் இரண்டு சைனோபாம் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள, குறைந்தளவான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைஸர், அஸ்ட்ராசெனெகா அல்லது மொடர்னா தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை வழங்கவேண்டும் என விசேட வைத்தியர்கள் குறித்த அறிக்கையின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளனர்.