110,000 பயனாளிகள் அடையாளம்!

samarasinge
samarasinge

சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் பயனாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று இராஜாங்க அமைச்சர் மஹிந்த சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (06) இடம்பெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பில், இரண்டு இலட்சம் சுயதொழில் முயற்சியாளர்களையும் புதிதாக தொழில்களை ஆரம்பிப்பவர்களையும் பொருளாதார ரீதியில் ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் முன்னெடுத்து உள்ளது. இதன் கீழ் 500 புத்தாக்க கிராமங்கள் ஆரம்பிக்க ஆரம்ப கிராமங்களும் ஆரம்பிக்க இருப்பதாக இராஜாங்க அமைச்சர் கூறினார்.

சுயதொழில் முயற்சியாளர்களின் தொழில்துறை தொடர்பான அரச நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் ஆய்வின் அடிப்படையில் இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சமூர்த்தி பயனாளிகள், குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோர் இதற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவர்களுக்கு தேவையான பயிற்சிகளையும் அறிவையும் அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும். 500 உற்பத்தி கிராமங்களை அமைக்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் இரண்டு பில்லியன் ரூபா வருமானத்தை தேசிய பொருளாதாரத்திற்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 50 ஆயிரம் உற்பத்தியாளர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வருடம் அளவில் இதன் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு 18 பில்லியன் ரூபா பங்களிப்பை பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சமரசிங்ஹ மேலும் தெரிவித்தார்.