கரடி தாக்கியதில் ஒருவர் படுகாயம்!

246 black bear
246 black bear

திருகோணமலை – மொரவெவ காட்டுப்பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற நபரொருவர் கரடி தாக்குதலுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் ரொட்டவெவ – மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஆர்.இம்தியாஸ் (40 வயது) என தெரியவருகின்றது.

நேற்று (09) மாலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:

வீட்டிலிருந்து தேன் எடுப்பதற்காக ஆறு பேரைக் கொண்ட குழுவினர் சென்றதாகவும் தேன் தேடுவதற்காக வேறு வேறாகப் பிரிந்து சென்ற போது மரத்துக்கு அருகில் மறைந்திருந்த கரடி தாக்கியதாகவும் இதனையடுத்து குறித்த நபரை அவருடன் சென்ற குழுவினர் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பின் மேலதிக சிகிச்சைக்காகத் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரின் கை மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. தற்போது தேன் மற்றும் காட்டுப் புளியம்பழம் ஆய்வதற்காக கந்தளாய் மஹதிவுல்வெவ – ரொட்டவெவ போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் காட்டுக்குச் செல்வதாகவும் இவ்வாறானவர்கள் மிகவும் கவனமாகக் கூட்டாக இணைந்து காட்டுக்குள் செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல் காட்டுப்பகுதிக்குள் செல்வதினால் இவ்வனர்த்தம் இடம்பெறுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.