இரண்டாவது தடுப்பூசியால் புதிய கொத்தணியை உருவாக்கிறதா சுகாதார திணைக்களம்?

IMG 857217fce36d714d68fa491dce54665d V
IMG 857217fce36d714d68fa491dce54665d V

வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் இடம்பெற்று வருகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களிற்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டால் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் அண்மையில் 81 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்று கடந்த மூன்று நாட்களாக இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

இதன் ஒரு கட்டமாக இன்றையதினம் வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் வவுனியா வடக்கு, தெற்கு வலயத்தினை சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்களிற்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் செயற்பாடு காலை 09.00 மணி முதல் இடம்பெறும் என்று வலயக்கல்வி பணிமனையினால் அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்றையதினம் வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரிக்கு அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் காலை 07.30 மணி தொடக்கம் வந்த வண்ணம் இருந்தனர். ஆயினும் 2 வது தடுப்பூசி போடுவதற்கான செயற்பாடு காலை 10.00 மணி வரை சுகாதார பிரிவினரால் முன்னெடுக்கப்படாமையால். பாடசாலை முன்பாக 350 க்கும் மேற்பட்டவர்கள் குழும வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இச்செயற்பாடு குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படாமையினால் பல கர்ப்பிணி தாய்மார்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியதுடன் மீண்டும் வீட்டிற்கு திரும்பிச்செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டது.வவுனியாவில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்றதுடன் கடந்த வாரம் வவுனியா மாவட்டத்தில் 45 பேர் வரையான கொரோனா மரணங்களும் இடம்பெற்ற நிலையில் பிராந்திய சுகாதார பணிமனையின் சரியான ஒழுங்குபடுத்தல் இன்மையே இதற்கு காரணம் என அதிபர், ஆசிரியர்கள் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக வவுனியா பிராந்திய சுகாதார பணிப்பாளர் மகேந்திரனிடம் கேட்ட போது… இந்த விடயம் தொடர்பாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரியிடம் பேசுவதாக தெரிவித்தார்.