அனைவரும் சமூக அந்தஸ்தை பெற பாடுபட்டவர் பாரதியார் – க.வி.விக்னேஸ்வரன்

vikki
vikki

இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவுநாள். 11.12.1882ல் பிறந்த சுப்பிரமணிய பாரதியார் தமது 38வது வயதில் 11.09.1921ல் இறைவனடி சேர்ந்தார். அவரின் குறுகிய வாழ் நாளில் அவர் செய்து முடித்தவை ஏராளம். ஒரு புலவராய் எழுத்தாளனாய் பத்திரிகையாளராய் சுதந்திர வீரராய் சமூக சீர்திருத்தவாதியாய் பன்மொழியாளராய் அவர் திகழ்ந்தார். பெண்விடுதலைக்காகப் போராடினார். குழந்தைகள் திருமணத்தை எதிர்த்தார். பிராமணராய் பிறந்தும்
பிராமணர்கள் வாழ்க்கைமுறையிலும் இந்துமத சடங்குகளிலும் இருந்த பிழைகளை வெளிப்படையாகச் சுட்டிக் காட்டினார். இந்து மக்களிடையே காணப்பட்ட தாழ்த்தப்பட்டோரையும் மற்றும் முஸ்லீம் சகோதரர்களையும் அணைத்து அவர்களுக்கு ஒரு சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்கப் பாடுபட்டார் என க.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

அவர்தம் எழுத்துக்கள் அரசியல் சமூகம் சமயம் போன்றவற்றில் மக்களின் சிந்தனையைக் கிளர உதவின. தமிழ்மொழி உரைநடைக்கு முன்னோடியாய் அவர் திகழ்ந்தார். கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற வகையில் இவரைப்பற்றி கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார் –

“ஊர் அறிய நாடு அறிய உண்மை எல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து உரைத்தோன்
ஆரமுதம் அனைய கவி பாடித் தந்தோன்
அமரகவி என்று அவரும் புகழ்பெற்றே
சீர் உயரும் தமிழ் மக்கள் செய் தவத்தால்
தென்னாடு சிறக்க வந்த சுப்பிரமணிய
பாரதியின் பெயர் போற்றி ஏத்துவோமே
பாமாலை புனைந்து அவர்க்குச் சாத்துவோமே”

கவிமணியுடன் நாமும் இன்று பாரதியாரை நினைவில் இருத்துவோமாக! இதே செப்ரெம்பர் 11ந் திகதியன்று அதாவது 1893ம் ஆண்டு செப்ரெம்பர் 11ந் திகதியன்று பாரதி பிறந்து 11 வருடங்களின் பின்ரூபவ் அமெரிக்கா சிக்காக்கோ நகரில் ஒரு முக்கிய நிகழ்வொன்று நடந்தது. அன்று தான் “எனதருமை அமெரிக்க சகோதரிகள் சகோதரர்களே” என்று விளித்த சுவாமி விவேகானந்தர் சிக்காக்கோ சர்வ மத சம்மேளன நிகழ்வில் அழியாப் புகழ் சூடிக் கொண்டார். பாரதத்தின் இவ்விரு புதல்வர்களும் நவீன உலகத்திற்கு புராதன பாரதத்தை அறிமுகம் செய்தவர்கள். அவர்கள் நாமம் நீடூழி காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.