நாளை முதல் கொரோனா தடுப்பூசி அட்டை பரிசோதனை!

image 9c23eed692
image 9c23eed692

மன்னாரில் உள்ள சோதனைச் சாவடிகளில் நாளை (15) முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்ட அட்டையை பரிசோதிக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் நேற்று (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் முடிவுக்கு வருகின்ற நிலையில் உள்ளது. இதன் அடிப்படையில் இது வரையில் 71,396 பேர் முதலாவது கொரோனா தடுப்பூசியையும் , 56,363 பேர் இரண்டாவது தடுப்பூசியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களில் முதலாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகும், 2 வது தடுப்பூசியை பெற்றவர்களின் எண்ணிக்கை 68 வீதமாகும்

கடந்த வாரம் முதல் தெரிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களில் கடமையாற்றுகின்ற 30 வயதிற்கு இடைப்பட்ட வர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

20 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப் பட்டவர்களுக்கான கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் விரைவில் ஆரம்பமாக உள்ளது.

அத்தோடு விசேட தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. தரவுகளும், சேகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களில் மன்னார் மாவட்டத்தில் 101 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 66 பேர் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்கள்.

இவர்களில் அதிகமானவர்கள் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.

தற்போது வரை 1966 கொரோனா தொற்றாளர்களும், இவ்வருடம் மாத்திரம் 1949 தொற்றாளர்களும், இந்த மாதம் 282 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு கொத்தணி உடன் தொடர்புடைய 1613 தொற்றாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்டத்தில் இதுவரையில் கொரோனா தொற்றாளர்களில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் கடைசியாக ஞாயிற்றுக்கிழமை 63 வயதுடைய ஆண் ஒருவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாத அனைவருக்கும் நாளையும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது. கட்டையடம்பன் மகா வித்தியாலயத்தில் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

30 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு பி.சி.ஆர். அல்லது அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டால் அவர்களை இடை நிலை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி. வினோதன் மேலும் தெரிவித்தார்.