இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானம்

milk powder
milk powder

இறக்குமதி செய்யப்படும் பால்மா ஒரு கிலோகிராமின் விலையை 200 ரூபாவினால் அதிகரிப்பது தொடர்பில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் பால்மா இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை 350 ரூபாவினால் அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் கோரியுள்ளனர்.

இதனையடுத்து நிதியமைச்சருடன் நீண்ட நேரம் சந்தையின் நிலை மற்றும் இறக்குமதிக்கான வரி என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டதன் பின்னர் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க இறக்குமதியாளர்கள் இணங்கியுள்ளனர்.

சர்வதேச சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமை, கப்பலுக்கான கட்டணம் அதிகரித்துள்ளமை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு இறக்குமதியாளர்கள் அரசாங்கத்திடம் கோரியிருந்தனர்.

எவ்வாறாயினும் இதற்கு அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படாமையை அடுத்து பால்மா இறக்குமதி தடைப்பட்டிருந்தது.

தற்போது சந்தையில் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

இந்த பின்னணியில் நிதியமைச்சருக்கும் பால்மா இறக்குமதியாளர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாட்டில் மாதாந்தம் 6,500 முதல் 7,000 மெற்றிக் தொன் வரையிலான பால்மா பயன்படுத்தப்படுகின்றது.

நாளாந்தம் சுமார் 200 மெற்றிக் தொன் பால்மா பயன்படுத்தப்படுகின்றது.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் பால்மா 945 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதோடு குறித்த விலை அதிகரிப்பினை அடுத்து 1,145 ரூபாவுக்கு ஒரு கிலோகிராம் பால்மா விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில் விலை அதிகரிப்பு அடுத்த வாரம் வாழ்க்கை செலவு குழுவிடம் அனுமதிக்காக முன்வைக்கப்படவுள்ளது.