கொரோனாவால் உயிழந்தவருக்கு வீட்டில் அஞ்சலி; மக்கள் விசனம்

corona death28 1 5
corona death28 1 5

கிளிநொச்சியில் கொரோனாத் தொற்றினால் உயிழந்தவரை அவருடைய வீட்டிற்குக் கொண்டு சென்று மக்கள் அஞ்சலி செய்ய அனுமதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த முன்னாள் கிராம அலுவலர் ஒருவர் கடந்த 16ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த கிராமத்தில் அவருடைய இறுதி நிகழ்வுகள் அவரின் வீட்டில் நடைபெறும் என்று ஒலிபெருக்கி ஊடாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் சமூக ஆர்வலர்களாலும் அரச உத்தியோகத்தர்களாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று (19) காலை 7.00 மணியளவில் அவரின் சடலம் வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்காக எனத் தெரிவிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

இருந்தபோதிலும் வாகனம் வவுனியா செல்வதற்கு பதிலாக உதயநகர் கிழக்கில் உள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று வாகனம் அவர்களின் வீட்டின் உள்ளே சென்றிருக்கின்றது.

குறித்த மரணச் சடங்கினை வீட்டில் நடத்துவதற்கான ஏற்பாட்டில் பிரபல மருத்துவர் ஒருவரும் முன்னின்று செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், மரணச் சடங்கு குறித்த தகவலை வைத்திய அதிகாரி பணிமனையிருக்கு வழங்கியவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஆதாரங்களும் ஊடகங்களுக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன.

கொரோனாவின் தொடர் தாக்கத்தால் அதிலிருந்து மீள்வதற்கு மக்களும் நாடும் கடும் சிரமப்பட்டுவரும் நிலையில் உயர் பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்கின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திவருகின்றன.