மணல் அகழ்விற்கு எதிராக சாவகச்சேரியில் கவனயீர்ப்பு போராட்டம்

f462c73b aef8 433c af0f 0f6411621e72
f462c73b aef8 433c af0f 0f6411621e72

சட்டவிரோத மணல் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை தடுப்பதற்கு வலியுறுத்தியும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.

சமூக ஆர்வலர் அகிலன் முத்துக்குமாரசுவாமியின் ஏற்பாட்டில் சாவகச்சேரி மத்திய பேருந்து நிலையம் முன்பாக இப் போராட்டம் நடாத்தப்பட்டது.

இதன் போது சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை என்ன வேடிக்கை பார்க்கிறதா?, வளத்தை வனாந்தரமாக்கும் வனத்திணைக்களம் எதற்காக? தமிழர் தாயகத்தைப் பாலைவனமாக்கப் போகிறீர்களா? மண்மாபியாக்களை வளர்ப்பதா அரசின் நோக்கம்? உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்;.

இதனைத் தொடர்ந்து மணல் அகழ்வை தடுத்து நிறுத்தக் கோரி சாவகச்சேரி பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது. அத்தோடு மணல் அகழ்வை நிறுத்த வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ந்தும் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது மக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.