ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் எமக்கான தீர்வாக அமையவில்லை -கதிர்

IMG 20210921 153144 1
IMG 20210921 153144 1

தொடர்ச்சியாக ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்பது இலங்கையினை அடிபணியவைப்பதும் அச்சுறுத்துவதுமாக இருந்தே அன்றி எமக்கான நல்ல தீர்வாக அமையவில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

2009 ஆம் ஆண்டு போர் நிறைவிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டுகளும் எமது மக்கள் ஜ.நாவினை எதிர்பார்த்த வண்ணம் இருந்தார்கள்.ஐ.நாவில் எமக்கான தீர்வு கொண்டுவரப்படும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கப்படும் இங்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

அதன் ஊடாக தமிழர் உரிமை பிரச்சினைக்கு நிதந்தர தீர்வினை பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மட்டத்தில் தொடர்ச்சியாக இருந்தது. இன்றும் அதே நிலைதான் காணப்படுகின்றது. இம்முறையும் மக்கள் மிகுந்த ஏமாற்றத்தினை சந்தித்துள்ளார்கள். அது மிகுந்த வேதனையளிக்கின்றது.

தொடர்ச்சியாக ஐ.நாவில் கொண்டுவரப்படும் தீர்மானம் என்பது இலங்கையினை அடிபணிய வைப்பதும் அச்சுறுத்துவதுமாகத்தான் இருந்தது. தீர்மானத்தினை நிறைவேற்றும் விடையமாக அமையவில்லை.

இலங்கை தமிழர்கள் தனித்துவமான இனம் வரலாற்று ரீதியாக வடக்கு கிழக்கு தாயகபகுதியில் வாழ்ந்து வந்தார்கள் என்ற அங்கீகாராம் இன்று வரைக்கும் உலக நாடுகளால் தமிழ்மக்களுக்கு வழங்கப்படவில்லை மாறாக இலங்கை நாட்டினை சர்வதேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டு சென்று அதன் ஊடாக தங்கள் பூகோள ரீதியான அரசியலை நகர்த்துவதற்காக தமிழ் மக்களின் பிரச்சினையினை சர்வதேசம் கையாண்டு வருகின்ற தோற்றப்பாடு காணக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய போராளிகள் என்ற வகையில் இது மிகுந்த மனவேதனையினை தருகின்றது. தொடர்ச்சியாக ஐ.நாவின் அமர்வு வரும் போது தமிழ்தேசியம் சார்ந்த அரசியல்வாதிகள் தங்களின் கட்சி கொள்கைகளையும் அரசியலையும் அந்த காலங்களில் முன்னெடுத்து செல்கின்றார்களே தவிர மக்கள் தொடர்பில் மக்களின் நிரந்தர தீர்வு இழைக்கப்பட்ட அநீதிகள் நீதி விசாரணை போரின் பின்னர் சரணடைந்த போர்க் கைதிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் போராளிகளின் மறுவாழ்வு நீதி விசாரணைகள் தொடர்பில் எந்த முன்னேற்றத்தினையும் இந்த அரசு செய்யவில்லை அதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க முன்வரவில்லை.

உண்மையில் போரில் ஈடுபட்ட சம பங்காளிகள் என்ற அடிப்படையில் போரிற்கு பின்னர் பத்து ஆண்டுகளாகியும் இலங்கை அரசாங்கம் நேரடிப்பங்காளிகள் என்ற வகையில் முன்னாள் போராளிகள் இன்று ஒரு அரசியல் கட்டமைப்பாக நாட்டில் செயற்பட்டு வருகின்றார்கள். எம்மோடு இலங்கை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எந்த பேச்சு வார்த்தையிலும் ஈடுபடவில்லை அதேபோன்று பன்னாட்டு சமூகமும் உண்மைகளை கண்டறிவதற்காக எந்த சாட்சியங்களும் பதிவு செய்து கொள்ள விரும்பவில்லை.

மாறாக போரில் சம்மந்தப்படாதவர்களுடன் விடுதலைப் போராட்டத்தின் எந்த தொடர்பும் இல்லாதவர்களுடன் மனித உரிமைகள் மக்களின் உரிமைகள் போராளிகளின் நிலைப்பாடு தொடர்பாக தொடர்ச்சியாக பேசுவதில் எந்த பயனும் இல்லை.

எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்திவிட்டு சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்தைகளை நடத்தி உண்மைகளை கண்டறிந்து நீதிக்கான பொறிமுறையினை உருவாக்குவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.

உள்நாட்டு பொறிமுறை என்பதை நாங்கள் ஒருபோதும் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது இங்கு பல ஏமாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன எனவே சர்வதேச ரீதியாக நீதி விசாரணையினை நிலைநாட்ட பன்னாட்டு சமூகம் முன் வரவேண்டும்.

போர் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டவர் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்கள் ஐ.நா சபையில் ஒரு ஜனநாயகத்தின் தலைவனாக அங்கிராம் பெற்று அங்கு உரையாற்றுகின்றார்

தமிழர்களின் சுயநிர்ணய உரிமை கோட்பாடு அனைத்தும் உலக நாடுகளால் நிராகரிக்கப்பட்டு இலங்கையின் ஆட்சி அதிகாரங்களுக்கு கீழ் ஒற்றையாட்சி முறையினை ஏற்றுக்கொண்டு தமிழர்கள் அடக்கு முறைக்குள் வாழவேண்டும் என்ற செய்தியினை உலகம் தமிழ் மக்களுக்கு சொல்லி நிற்பதாகவே நாங்கள் கருதுகின்றோம்.

இந்திய அரசின் 13 ஆவது திருத்தச்சட்டத்தினை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த தவறியுள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்தி ஒரு ஜனநாயக ஆட்சியினை கொண்டுவர அரசு முன்வரவில்லை தொடர்ந்தும் மத்திய அரசின் அடக்குமுறைக்கு கீழ் தமிழர்களை அடக்கி ஆள்வதற்காக புதிய சட்டங்களையும் அரசியல் யாப்புக்களையும் மாற்றி எழுதுவது தான் அரசின் நோக்கமாக இருக்கின்றது

இவ்வாறான நிலையில் தமிழர்களுக்கு ஒரு சட்டம் உலக நாடுகளுடன் ஒரு சட்டம் என்று நாட்டை வழி நடத்திக்கொண்டிருக்கும் கோத்தபாய ராஜபக்ச அவர்கள் உலக அரங்கில் தான் ஒரு ஜனநாயக வாதி என்பதை நிலை நாட்டுவதற்காக உரையாற்ற சென்றுள்ளார்.

இதற்கு சர்வதேச தமிழ் அமைப்புக்கள் தொடர்ச்சியாக எதிர்பினை தெரிவிக் வேண்டும் அமெரிக்கா என்ற வல்லரசிற்கு இந்த செய்தியினை கொண்டு செல்ல வேண்டும் என்றார்.