எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற இரண்டு நாடுகளுடன் இலங்கை பேச்சு!

860 main fossil fuels explainer
860 main fossil fuels explainer

எரிபொருள் கொள்வனவுக்கு கடன் பெற்றுக்கொள்வது தொடர்பிலும், எரிபொருளைக் கடனாகப் பெற்றுக்கொள்ளது தொடர்பிலும் இந்தியா மற்றும்  ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இந்திய அரசிடமிருந்த 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பித்துள்ளது என ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்துள்ளார் என்று செய்தி வெளிவந்துள்ளது.

நிலுவையில் உள்ள எரிபொருள் கொள்வனவுக்கான தொகையைச் செலுத்துவதற்கும் புதிதாக எரிபொருள் கொள்வனவு செய்வதற்குமே இந்தக் கடன் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இரண்டு முக்கிய உள்நாட்டு வங்கிகளில் கிட்டத்தட்ட 3.3 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாகப் பெற்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களில் கூறப்பட்டுள்ளதைப் போன்று ஈரானிடமிருந்து கடன் கோரப்படவில்லை எனத் தெரிவித்துள்ள அவர், “கட்டுப்பாடுகளின் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுடன் நாங்கள் கடன்கள் தொடர்பான விடயங்களைக்  கையாள்வோம்” எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, ஐக்கிய அரபு இராச்சியத்திடமிருந்து கடன் அடிப்படையில் எரிபொருள் கொள்வனவு செய்வது குறித்து பேச்சுகளை முன்னெடுத்துள்ளார்.

கடன் வசதியில் கச்சா எண்ணெயை கொள்வனவு செய்வது தொடர்பில் எமிரேட் தேசிய எண்ணெய் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளுடனான பேச்சுகள் சாதகமாக முடிவடைந்துள்ளன எனவும் அமைச்சர் கம்மன்பில சில நாட்களுக்கு முன்னர் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.