சர்வதேசத்தின் தலையீட்டை ஒருபோதும் ஏற்கமாட்டோம் – பீரிஸ்

gl peiris colombo press
gl peiris colombo press

உள்நாட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை சர்வதேசத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை ஒருபோதும் தயாரில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கைக்கு எதிரான சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அதன் தனித்துவங்களைப் பாதுகாத்துக்கொண்டு, இறையாண்மையுடன் வெற்றியை நோக்கிப் பயணிக்க அரசு வழிவகைகளை மேற்கொள்கின்றது. இலங்கை எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையை வெற்றிகொள்வதற்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

இலங்கையின் பிரச்சினைகளை உள்ளக நிறுவனங்களின் ஊடாகத் தீர்த்துக்கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். நாட்டு விவகாரங்களை வெளியக நிறுவனங்களுக்குப் பொறுப்புக் கொடுப்பதை அங்கீகரிப்பதில்லை. ஐ.நா., அதன் சட்ட ஒழுங்குகளுக்கு அமைய அனைத்து நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டும்” என்றார்.