அரசாங்கம் தமிழர்களின் விடயத்தில் நேர்மையாக நீதியாக நடக்கவேண்டும் – விந்தன் கனகரத்தினம்

Untitled 42
Untitled 42

இதய சுத்தியுடன் அரசாங்கம் தமிழர்களின் விடயத்தில் நேர்மையாக நீதியாக நடக்கவேண்டும். வெளிநாடுகளிலே ஒரு பேச்சு இலங்கையிலே இன்னொரு பேச்சு. இப்படியாக இரட்டைவேடம் போடுகின்ற இந்த அரசியலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென ரெலோவின நிதிச்செயலாளரும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையினுடைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் புலம் பெயர் தேசங்களில் இருக்கக்கூடிய தமிழர் அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு தெரிவித்திருக்கின்றார்.

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரித்தானியா,கனடா, ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர் தேசங்களில் இயங்கக்கூடிய அமைப்புகளை இலங்கை அரசாங்கம் தடை செய்திருக்கின்றது. கறுப்பு பட்டியலில் சேர்த்து இருக்கின்றது. அந்த அமைப்புகள் எல்லாம் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கின்ற தொடர்ச்சியாக போராடுகின்ற அமைப்புகளை, கடந்த காலங்களில் பயங்கரவாதத்துக்கு துணை போகின்ற அமைப்புகளாக முத்திரை குத்தி தடை செய்தனர்.
ஆனால் அந்த அமைப்புகளை தடை செய்து வைத்துக்கொண்டு அந்த அமைப்புக்களோடு பேசப்போகின்றோம் என்ற செய்தி நகைப்புக்கிடமாக எண்ணத் தோன்றுகின்றது. 

அரசாங்கம் முதலில் அந்த அமைப்புகளை தடைப்பட்டியலில் இருந்து நீக்க வேண்டும். அத்தோடு அரசாங்கத்துக்கு ஊதுகுழலாக இணைந்து செயற்படுகின்ற பல அமைப்புகளும் வெளிநாடுகளில் இருக்கின்றன. அத்தகைய அமைப்புகளோடு அரசாங்கம் பேசுவார்களாக இருந்தால் அதனை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
வடக்கு கிழக்கிலே பெரும்பான்மையான தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் இருக்கின்றன. நாடாளுமன்றத்திலும் பலர் பங்கு கொண்டிருக்கின்றார்கள். இந்தப் இனப்பிரச்சினை விவகாரங்களை எங்களை விடுத்து புலம்பெயர் அமைப்புகளோடு பேசப்போகிறோம் என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அதே நேரத்தில் புலம்பெயர் அமைப்புகள் குறிப்பாக, சில நிபந்தனைகளை அமைப்புகள் நிபந்தனைகளை விதித்து இருக்கின்றன.

இதய சுத்தியுடன் அரசாங்கம் தமிழர்களின் விடயத்தில் நேர்மையாக நீதியாக நடக்கவேண்டும். வெளிநாடுகளிலே ஒரு பேச்சு இலங்கையிலே இன்னொரு பேச்சு.இப்படியாக இரட்டைவேடம் போடுகின்ற இந்த அரசியலை அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றார்.